நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம்: புதிய கொள்முதலுக்கு தாமதம்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கமடைந்ததால் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது.;
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாமல் தேங்கி கிடப்பதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 சதவீதத்திற்கு மேல் அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில் எஞ்சிய அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இயற்கை இழப்பு ஏற்படாமல் உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய ஏதுவாக தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தின் 400க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. இத்தகைய கொள்முதல் நிலையங்களில் அரசின் ஆணையின்படி தினசரி 1000 என்ற இலக்கில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரசு இயக்கம் செய்து சேமிப்பு கிடங்கிற்கு தினசரி எடுத்து செல்லவேண்டும்.
ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு தேவைக்கு ஏற்ப இம்மாவட்டத்தில் போதுமான சேமிப்பு கிடங்கினை ஏற்படுத்திதர தவறியதால் இன்றைக்கு ஒவ்வொரு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 5000 முதல் 10,000வரை தேங்கி கிடக்கின்றன.
நிர்வாகம் நெல்மூட்டைகளை இயக்கம் செய்யாமல் தேங்கி கிடக்கும் சூழ்நிலையால் கொள்முதல் நிலைய பணியாளர்கள் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் இயக்கம் செய்யபடாவிடில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இயற்கை இழப்புகளை சந்திப்பதோடு, அதற்கு உண்டான இழப்பீட்டு தொகையை செலுத்தவேண்டிய அபாய நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.
சேமிப்பு கிடங்கு வசதி இல்லாததே அடிப்படை காரணமாக இருந்து வருகிறது. இக்காரணங்களால் இறுதியில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியாமலும் வயல்களில் உள்ள நெல்லை அறுவடை செய்ய முடியாமலும் கடும் அவதிக்கும் இயற்கை இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.