சிவகாசி, விருதுநகர், சாத்துார் பாணியில் தேனியிலும் வீட்டிலேயே வேலைவாய்ப்பு..!
Theni District News- சிவகாசி, விருதுநகர், சாத்துார், செங்கோட்டை நகரங்களின் பாணியில் தேனியிலும் பெண்கள் வீட்டிலேயே இருந்து வேலை செய்யும் வாய்ப்பினை உருவாக்கி உள்ளனர்.
Theni District News-சிவகாசி, விருதுநகர், சாத்துார் பகுதிகளில் பல வீடுகளில் பெண்கள் தங்களது வீடுகளிலேயே பட்டாசு, தீப்பெட்டி தயாரித்து பெரிய கம்பெனிகளுக்கு வழங்குகின்றனர். தாங்கள் செய்த வேலைக்கு உரிய சம்பளத்தை கொடுக்கின்றனர். செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுக்கிராமங்களில் பெண்கள் வீடுகளில் பீடி சுற்றி கம்பெனிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
அதே பாணியில் தேனியில் பெண்கள் வீடுகளில் புளி தட்டி பாக்கெட் போட்டு தருகின்றனர். சில வியாபாரிகள் மிட்டாய் தயாரித்து பாகு போல் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி பாலீதீன் பேப்பரில் சுருட்டி கொடுக்கின்றனர். சில தொழிலதிபர்கள் துணிப்பைகள் ஆர்டர் கொடுக்கின்றனர்.
துணிகளை வீட்டிற்கு வாங்கி வரும் பெண்கள், வீட்டில் வெட்டி, குறிப்பிட்ட அளவுகளில் தைத்து கம்பெனிகளுக்கு கொடுக்கின்றனர். இந்த வேலை செய்யும் போது பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே இந்த பணிகளை செய்கின்றனர். தாங்கள் வேலை செய்யும் அளவிற்கு ஏற்ப குறைந்தது தினமும் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். சில தொழிலதிபர்கள் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் சிறிய இடம் பிடித்து மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் தயாரிக்கின்றனர். சுற்றிலும் உள்ள பெண்கள் இந்த சிறிய தொழிற்கூடத்திற்கு வேலைக்கு வந்து மிட்டாய், பல்வேறு இனிப்பு, கார வகைகள் தயாரித்து கொடுத்து சம்பளம் பெருகின்றனர்.
இது குறித்து தேனியை சேர்ந்த மகாலட்சுமி கூறியதாவது: நான் வீட்டிலேயே புளி தட்டுகிறேன். இதனால் என் வீட்டு வேலைகளை செய்வதிலும், கணவர், குழந்தைகளை பராமரிப்பதிலும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்கிறேன். மீதம் கிடைக்கும் நேரத்தில் மட்டுமே வேலை செய்து வருவாய் ஈட்டுகிறேன். இதுவே எனக்கு போதுமானதாக உள்ளது. என்றார்.