மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முறையீடு

தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி அனுப்பானடி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டரிடம் முறையிட்டனர்;

Update: 2021-09-15 14:00 GMT
டாஸ்மாக் கடை வேண்டாம் என தேனி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த அனுப்பானடி கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர்.

எங்கள் கிராமத்தில் மீண்டும் மதுக்கடை அமைத்து பாழ்படுத்தி விடவேண்டாம்  என அனுப்பானடி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலெக்டர் முரளீதரனை சந்தித்து முறையிட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, அனுப்பானடி கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடும் எதிர்ப்பால், டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் ஏற்கெனவே கை விடப்பட்டன. தற்போது வரை அங்கு டாஸ்மாக் கடை இல்லை. இந்நிலையில், இங்கு மீண்டும் மதுக்கடை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகளிர் குழு தலைவர்கள் பசுபதி, பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள், கலெக்டர் முரளீதரனை இன்று சந்தித்து மனு அளித்தனர். தங்களது கிராமத்தில் பள்ளிகள், கோயில்கள், பஸ் ஸ்டாண்ட், சந்தை இருக்கும் இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிகள் நடக்கிறது.

இதுவரை, டாஸ்மாக் கடை இல்லாததால், எங்களது கிராமம் அமைதியாக உள்ளது. இந்நிலையில், தற்போது நடைபெறும் முயற்சிகள் மூலம் டாஸ்மாக் அமைக்கப்பட்டால் தேவையில்லாத பிரச்னைகள், முளைத்து கிராமம் அமைதியிழந்து விடும். எனவே கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு தடுக்க வேண்டும் என கூறினர். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக மகளிர் குழுவினரிடம் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News