தேனி மாவட்டத்தில் மகளிர் இவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாமா?
தேனி மாவட்டத்தில் பெண்கள் அரசு நகர்ப் பேருந்துகளில் அதிகபட்சமாக 40 கி.மீ., துாரம் வரை இலவசமாக பயணிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம், லோயர்கேம்ப்பில் அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் இருந்து மொத்தம் 78 நகரப் பேருந்துகள் பெண்களின் இலவச பேருந்து பயண திட்டத்தில் பயணிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பெண்களின் உரிமை பயணம் என முதல்வர் குறிப்பிட்டுள்ளதை மறக்க கூடாது. இந்த உரிமை பயண திட்டத்தை செய்திக்காக இலவச பயண திட்டம் என குறிப்பிடுகிறோம்.
பெரும்பாலானவர்கள் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்சம் 3 கி.மீ., முதல் அதிகபட்சம் 15 முதல் 20 கி.மீ., வரை பயணிக்கலாம் எனத்தான் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மை நிலை வேறு.
தேனி மாவட்டம் மிகச்சிறிய மாவட்டம் இந்த மாவட்டத்தில் பெண்கள் அதிகபட்சம் 40 கி.மீ., துாரம் இலவசமாக இந்த நகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். அதாவது தேனியில் இருந்து மயிலாடும்பாறை வரை 40 கி.மீ., துாரம் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தேனியில் இருந்து குப்பிநாயக்கன்பட்டி வழியாக ஓடைப்பட்டி வரை நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுவும் 40 கி.மீ., துாரம் தான்.
இந்த நகரப் பேருந்துகளி்ல் ஆண்களுக்கு 40 கி.மீ., துாரம் பயணிக்க 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இடையே பல கிராமங்களை இணைத்து செல்வதும் குறிப்பிடத்தக்கது. அதாவது 40 கி.மீ., துாரம் பயணித்து நகர் பகுதிக்கு வந்து, தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு, கிராமத்திற்கும் இலவசமாக திரும்ப செல்ல முடியும்.
இப்படி இலவச பயண பேருந்து வசதி தேனி மாவட்டத்தில் பலநுாறு கிராமங்களை இணைத்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. எவ்வளவு தான் சர்ச்சைகள், விமர்சனங்கள், மாற்றுக்கருத்துக்கள் எழுந்தாலும், தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களில் உழவர்சந்தை திட்டத்திற்கு இணையாக இந்த திட்டமும் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.