ரோமியோக்களின் தொல்லையால் தேனியில் அவதிப்படும் பெண்கள்
தேனியில் ரோமியோக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
தேனியில் மினி பேருந்துகளின் அராஜகம் அதிகளவில் உள்ளது. மினிபேருந்துகளை இயக்குபவர்களில் பலர் பணியின் போது போதை புகையிலை பயன்படுத்துகின்றனர். தவிர வேகமாக வாகனம் ஒட்டுவது, திடீரென பயணிகளை ஏற்ற பேருந்துகளை நிறுத்துவது, விபத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அரண்மனைப்புதுாருக்கு இயக்கப்படும் பேருந்து தேனியில் மதுரை ரோட்டோரம் பகவதியம்மன் கோயில் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இங்கு ரோமியோக்களின் தொல்லை அதிகம் உள்ளது. இதனை மினி பேருந்து, டிரைவர், கண்டக்டர்கள் கண்டுகொள்வதில்லை. மாறாக அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு ரோட்டிலேயே நெரிசல் மிகுந்த பகுதியில் விளையாடுகின்றனர். அசிங்கமாக பேசி விளையாடுவதோடு, பெண்களை கிண்டல் செய்தும், அவர்களையே உற்றுப்பார்த்து சேட்டைகள் செய்வதுமாக நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதனை பார்த்த பெண்கள் தலையை கவிழ்ந்து கொண்டு, அமைதியாக பேருந்தில் ஏறி அமர்ந்து வேறு எங்கோ பார்ப்பது போல் அமைதியாக அந்த நெருக்கடியை கடக்கின்றனர். மினி பேருந்து ஏற வரும் பெண்கள் இவ்வளவு டார்ச்சருக்கு உள்ளாவதை அந்த பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களும் கண்டிப்பதில்லை.
எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்களிலும் நெருக்கடியான வீதிகளில் இந்த பிரச்னை அதிகமாகவே உள்ளது. இது குறித்து தேனி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛குறிப்பிட்ட தெருக்களில் போலீஸ் பீட் மார்ச் போடப்பட்டுள்ளது. யாராவது பெண்களை கிண்டல் செய்தாலோ, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் நடந்து கொண்டாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்தால், ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்போம் என்று கூறினார்.