நான்கு வழிச்சாலையில் களை வெட்டும் பெண்கள்
தேனி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலையில் களை வெட்டும் பெண்களுக்கு தினக்கூலியாக ரூ.280 வழங்கப்படுகிறது.;
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் குமுளி இடையே நான்கு வழிச்சாலை, மதுரை- மூணாறு இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச்சாலைகளின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, அந்த தடுப்புகளுக்கு இடையே அரளிச் செடிகள் வளர்க்கப்படும்.
இந்த அரளிச் செடிகளால் பல பயன்கள் உள்ளன. முதல் பயன் அரளிச் செடிகள் ரோட்டில் செல்லும், வாகனங்களில் வெளியிடும் புகையில் உள்ள கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி அதிகளவு ஆக்ஸிஜன் வெளியிடும். இரண்டாவது பயன், அடர்ந்து வளர்ந்த அரளிச் செடிகள், ஒரு பக்கம் செல்லும் வாகனங்கள் வெளியிடும் லைட் வெளிச்சத்தை ரோட்டின் மறுபக்கம் கடத்தாமல் தடுத்து விடும்.
இதனால் எதிரெதிரே வரும் வாகனங்களின் முகப்பு லைட் வெளிச்சத்தன் கூச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒட்ட முடியும். ஆனால் நம்ம ஊர் நான்கு வழிச்சாலைகளில் அரளிச் செடிகளை எங்காவது ஓரிடத்தில் தான் பார்க்க முடியும். செடிகள் வளர்த்தாக கணக்கு எழுதி பணத்தை எடுத்து விடுவார்கள். அந்த கதையெல்லாம் இப்போது வேண்டாம்.
அரளிச் செடிகள் தேனி மாவட்டத்தின் நான்கு வழிச்சாலையில் எங்குமே இல்லை. மாறாக இந்த தடுப்புச்சுவர்களுக்கு இடையே உள்ள மண்ணில் களைச்செடிகள், முட் செடிகள், புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனை அகற்றி சுத்தம் செய்ய தினக்கூலிக்கு பெண்களை அழைத்து அதிகாரிகள் வேலை தருகின்றனர்.
இவர்களுக்கு தினசரி வழங்கப்படும் சம்பளம் அதிகபட்சம் 280 ரூபாய் என பெண்கள் கூறுகின்றனர். (ஆனால் எவ்வளவு சம்பளக்கணக்கு எழுதப்படுகிறது என்பது ஆடிட்டர்களுக்கு மட்டுமே தெரியும்). எப்படியே இப்படி ஒரு காரணத்திற்காக அடிக்கடி வேலை தருகிறார்களே அதுவே போதும் என களை வெட்டும் பெண்கள் தெரிவித்தனர்.