கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்

Kidnapping Cases -கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தைக்கு பெண்\காவலர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-11-01 03:15 GMT

பைல் படம்

Kidnapping Cases -என்ன தான் காக்கிச் சீருடை அணிந்து கம்பீரமாக வலம் வந்தாலும், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை உணர்வு வெளிப்படவே செய்கிறது. சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கேரள பெண் போலீசின் தாய் மனதை  பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதள பிரியர்கள் இந்த பெண்போலீசின் மனித நேயத்தை கொண்டாடி வருகின்றனர். அப்படி அந்த பெண் போலீஸ் என்ன தான் செய்தார் என்பதை நீங்களும் படித்துப் பாருங்கள்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், சேவயூர் காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் ரம்யா. இவர் பணிசெய்யும் காவல் நிலையத்துக்கு கடந்த 22 -ம் தேதி புழக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண் ஒரு புகார் அளிக்க வந்தார். அதில் பிறந்து இரு வாரம் கூட முழுமையடையாத தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு என் கணவர் ஆதிலும், அவரது தாயாரும் தலைமறைவாகிவிட்டனர். எனக்கும், என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படிச் செய்துள்ளனர் எனவும்  புகார் கொடுத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஆதிலும், அவரது தாயாரும் குழந்தையை பெங்களூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே சேவயூர் போலீஸார் அவர்களை சுல்தான் பத்தேரி என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மடக்கிப் பிடித்தனர். அந்த குழுவில் காவலர் ரம்யாவும் சென்று இருந்தார்.

குழந்தையை மீட்டபோது அது பசியால் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. உடனே போலீஸார் கல்பேட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாய்ப்பால் குடிக்காமல் குழந்தைக்கு இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அப்போது காவலர்கள் குழுவில் இருந்த ரம்யா, குழந்தையின் பசியை போக்க மருத்துவர் அனுமதித்தால் தானே தாய்ப்பால் கொடுப்பதாகச் சொன்னார். மருத்துவர்களும் அனுமதிக்கவே குழந்தைக்கு தாய்பால் கொடுத்ததோடு, ஆசிகாவிடம் குழந்தையை ஒப்படைக்கும்வரை தாயுள்ளத்தோடு பாதுகாத்தும் இருக்கிறார் காவலர் ரம்யா.

குழந்தை கடத்தல் வழக்கில் குழந்தையின் தந்தை ஆதிலை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து காவலர் ரம்யா கூறுகையில், "எனக்கும் ஒரு வயதில் குழந்தை உள்ளது. பசியால் இந்தக் குழந்தை அழுதபோதும்கூட என் குழந்தைபோல் நினைத்துதான் பால் கொடுத்தேன். என் வாழ்வில் இன்று மிகவும் அர்த்தமுள்ள நாள்" என்றார். கேரள முதல்வர் முதல் அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் இந்த விஷயம் சென்று சேர்ந்து விட்டது. அத்தனை பேரும் இந்த பெண் போலீசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,புகார் கொடுத்த குழந்தையின் தாய் ஆசிகா, இந்த பெண் போலீஸ் செயலை கேட்டு மனம் உருகி, என் குழந்தையை நான் பெற்றெடுத்த தாய்..மட்டுமே. ஆனால் உண்மையில் குழந்தைக்கு உயிர் கொடுத்த தாய் போலீஸ் ரம்யா  தான் என உருக்கமாக அத்தனை பேரிடமும் கூறி வருகிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News