லிவ்விங் டு கெதர் குடும்பம் ஆகாது பெண்களுக்கு கேரள ஐகோர்ட் எச்சரிக்கை
லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை ஆகாது என்பதை கேரள ஐகோர்ட் பெண்களுக்கு புரிய வைத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட தி.மு.க., அரசியல் பிரமுகர் ஜீவா. மிகப்பெரிய சமூக ஆர்வலரான, இவர் யூடியூபரும் ஆவார். கேரள ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கு, சமூக நிலவரம் குறித்து ஜீவா கூறியதாவது: இன்று பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக கல்வித்துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே பட்டவர்த்தமான உண்மை. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் தொடங்கும் ரேஸ், பிளஸ் 2, மருத்துவ நுழைவுத்தேர்வு, பொறியியல் நுழைவுத்தேர்வு, கல்லுாரி படிப்பு, அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் என நீண்டு கொண்டே செல்கிறது. அத்தனை இடங்களிலும் ஆண்களை விட பெண்கள் பெருமளவில் வெற்றி பெற்று விடுகின்றனர். இதே நிலை நீடித்தால் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் அளவு அரசுத்துறைகளிலும் தனியார் துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும். அந்த அளவு பெண்கள் படிப்பறிவில் முன்னேறி வருவது மிகவும் போற்றத்தக்க வரவேற்கத்தக்க விஷயம் ஆகும்.
இப்படி படிப்பில் முன்னேறும் பெண்கள், வாழ்விலும் சுய சார்பினை எதிர்பார்க்கின்றனர். அதில் தவறு ஏதும் இல்லை. சுய சார்பு என்றால் என்ன? தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதேநேரம் பாதுகாப்பான வாழ்க்கை வாழ வேண்டும். ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பான வாழ்க்கையினை கணவன், தாய், தந்தை, குழந்தைகள் என்ற குடும்ப உறவுகளை தவிர வேறு எவராலும் கொடுத்து விட முடியாது. ஆனால் கல்வி அறிவியல், பொருளாதாரத்தில் முன்னேறிய பல பெண்கள் குடும்ப உறவினை தனக்கு இடப்பட்ட சங்கிலியாகவே நினைக்கின்றனர். அதனை தன்னை சூழ்ந்த ஒரு சங்கிலி என நினைக்கின்றனர். அது சங்கிலியாகவே இருந்தாலும், அது தான் அவர்களை பாதுகாக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. படித்த பெண்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். குடும்ப உறவுகளை தவிர பெண்களுக்கு வேறு யாராலும் வாழ்வியல் பாதுகாப்பினை தர முடியாது.
பொருளாதாரம் இருக்கிறது என்பதற்காக குடும்பத்தை விலக்கி வைக்கும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இங்கு தான் லிவ்விங் டு கெதர் என்ற ஒரு அபாயம் உருவாகி வருகிறது. ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது. பிடிக்காவிட்டால் பிரிந்து செல்வது தான் லிவ்விங் டூ கெதரின் சாராம்சம். இது மிகவும் அபாயகரமானது. இதில் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை விட பெண்களுக்கு பல நுாறு மடங்கு பாதிப்பு அதிகம். இதனை சமூக ஆர்வலராக நான் மட்டும் சொல்லவில்லை. கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் உறுதிப்படுத்தி உள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவ்விங் டுகெதர் உறவில் வாழ்ந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர், தன்னை குடும்ப வன்முறை செய்ததாக இளம்பெண் புகாரளித்தார். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், ''இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது. லிவ்விங் டுகெதர் உறவில் பங்குதாரர் (பார்ட்னர்) என்று மட்டுமே கூற முடியும். அந்த உறவு திருமணம் அல்ல. துணையை கணவர் என்று அழைக்க முடியாது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது'' எனக் கூறினர்.
இந்த சம்பவத்தை பெண்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். லிவ்விங் டூ கெதர் வாழ்வில் தான் மிகப்பெரிய அபாயங்கள் உள்ளன. குடும்ப வாழ்வில் சிறு, சிறு சுமைகள் இருக்கத்தான் செய்யும். அது சுகமான சுமைகள் என்பதை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். இந்த குடும்ப உறவுகள் தான் இந்தியாவின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரமாக இருந்து வருகிறது. இந்திய பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் எல்லாமே பெண்களின் பாதுகாப்பினை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டவை. எனவே படித்த பெண்கள் குடும்ப உறவுகளை புறக்கணிக்க கூடாது. லிங்விங் டூ கெதர் என்ற நம் பண்பாட்டிற்கு ஒத்து வராத ஒரு நாகரீகத்திற்கும் புகுந்து தங்களை சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது. இவ்வாறு கூறினார்.