சுடுகாட்டுக்கு ரோடு வசதி இல்லாமல் 4 கி.மீ., துாரம் சுற்றும் பொதுமக்கள்

தேனியில் பல குடியிருப்பு பகுதிகளுக்கு சுடுகாட்டுக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால், இறந்தவர் உடலுடன் நான்கு கி.மீ., துாரம் வரை சுற்றிச் செல்கின்றனர்.

Update: 2023-11-01 16:11 GMT

தேனியில் வள்ளிநகர், குறிஞ்சிநகர், கக்கன்ஜிகாலனி பகுதியில் உள்ள பொதுமக்கள், அந்த பகுதியில் இறந்தவர் உடல்களை பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டுகின்றனர். இப்பகுதியில் இருந்து ஒண்டிவீரன் காலனி மெயின் ரோட்டை இணைத்து ரோடு அமைத்தால் இ ப்பகுதி மக்கள் ஒரு கி.மீ., தொலைவில் சுடுகாட்டுக்கு சென்று விடலாம்.

ஆனால் அந்த ஒரு கி.மீ., துாரத்தில் 200 மீட்டர் துாரம் மட்டும் ரோடு வசதி இல்லை. மாறாக முள்வேலி போட்டு அடைத்து வைத்துள்ளனர். இந்த வேலியை அகற்றி விட்டு ரோடு அமைத்தால் இவர்களுக்கு வசதியாக இருக்கும்.

நகராட்சி இந்த ரோடு வசதி செய்யாததால், இந்த பகுதி மக்கள், இறந்தவர் உடல்களை 4 கி.மீ., துாரம் வரை துாக்கிக் கொண்டு சுற்றிச் செல்கின்றனர். தவிர இவர்கள் நெருக்கடி மிகுந்த அல்லிநகரம் மெயின் ரோட்டில் இறந்தவர் உடல்களை துாக்கிச் செல்வதால், ஏற்கனவே நெரிசல் மிகுந்த அந்த ரோட்டில் மேலும் நெரிசல் அதிகரிக்கிறது.

இது தவிர வேலைக்கு செல்பவர்கள், பல்வேறு பணிகளுக்காக உறவினர் வீடுகளுக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என அத்தனை பேருக்கும் இதே நிலை தான் காணப்படுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்க குறிஞ்சிநகர்- ஒண்டிவீரன் காலனி மெயின் ரோட்டினை இணைக்கும் வகையில் ரோடு அமைத்து தர வேண்டும். அந்த ரோடு அமைத்தாலே இப்பகுதி மக்களுக்கு கூடுதல் வசதி கிடைத்து விடும்.

Tags:    

Similar News