பாமக.,வுக்கு கை கொடுக்குமா விக்கிரவாண்டி?

10.5% வன்னியர் இட ஒதுக்கீடு, கள்ளச்சாராயம் போன்ற விவகாரங்கள் பா.ம.க.,வுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கை கொடுக்குமா?

Update: 2024-06-29 00:48 GMT

விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தையும் பா.ம.க தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சியில் அபிநயா ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். மேலும் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் தேர்தலில் போட்டியில்லை எனக் கூறிவிட்டன. இதனால் தி.மு.க, பா.ம.க இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எப்படியும் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக தி.மு.க அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது.

வன்னியர் சமூக மக்கள் நிறைந்த பகுதி என்பதால் பா.ம.க-வும் கடும் நெருக்கடி கொடுக்கிறது. இதற்காக பா.ம.க, ' வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து இருக்கிறது.

சட்டப்பேரவையிலும் இதுகுறித்து தீவிரமாக பேசி வருகிறார்கள். சமீபத்தில் பா.ம.க உறுப்பினர்கள் 10.5% வன்னியர் இடஒதுக்கீடு பற்றி சட்டப்பேரவை தலைவர் பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, "10, 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் வன்னியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வட மாவட்டங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக வன்னியர்கள் பின்தங்கி இருப்பதே காரணம். எனவே அவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என்றார்.

அதற்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள், "`மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்த முடியும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது" என்றனர். தொடர்ந்து பேசிய ஜி.கே மணி, "சாதிவாரி கணக்கெடுப்புக்கும் மாநில அரசு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியான பிரச்னைகள்" என்றார். இதையடுத்து பா.ம.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மறுபக்கம் கள்ளக்குறிச்சி விவகாரத்தையும் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது, பா.ம.க.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "தமிழக அரசு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. ஆனால் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என சொல்கிறது. வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய தி.மு.க இடஒதுக்கீடு மூலம் அவர்கள் பிரதிநிதிதுவம் பெறுவதை விரும்பவில்லை. இதற்கு தி.மு.க சொல்லும் காரணம் சரியானது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளிவிவரங்களின் மூலம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தி.மு.க கூறியதை பா.ம.க, வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியது பொய்யான தகவல்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பா.ம.க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் தி.மு.க தான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972-ம் ஆண்டு அறிமுகம் செய்தது தி.மு.க தான். எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்திலும் இந்த இரு விவகாரங்களை பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் பாமக-வினர். எனவே இவ்விரண்டு பிரச்னைகளையும் பா.ம.க கையில் எடுத்து இருப்பது கள்ளக்குறிச்சியில் அவர்களுக்கு கை கொடுக்குமா என்கிற கேள்வி எழுகிறது?.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விமர்சகர்கள், "கள்ளக்குறிச்சி விவகாரம், 10.5% வன்னியர் இடஒதுக்கீடு ஆகியவற்றை கையில் எடுத்து பேசி வருகிறார்கள். ஆனால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் தான். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 36,000 வாக்குகள் தான் பாமகவினர் பெற்றிருக்கிறார்கள். வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கு பேரம் பேசுவதற்குத்தான் இந்த தேர்தலை பா.ம.க சந்திக்கிறது. ஆகவே கூட்டணி பேரத்துக்கு விக்கிரவாண்டி அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பல இடைத்தேர்தல்களை புறக்கணித்தது தான் அவர்களின் வரலாறு. பென்னாகரம், விக்கிரவண்டியாக இருந்தால் போட்டியிடுவார்கள். அதுவே கூடலூர், நாங்குனேரி என்றால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள். இடைத்தேர்தலே வேண்டாம் பணம் செலவாகும் என அறிக்கை விடுவார்கள்.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியின் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தும். 2024 தேர்தலுக்கு இன்னும் இரண்டுஆண்டுகளுக்கு குறைவான காலம் தான் இருக்கிறது. அதற்குள் வேறு கட்சியை மக்கள் தேர்வு செய்தால் மவுன புரட்சி என்று தான் கருத வேண்டும். ஆனால் அதை மக்கள் செய்ய வாய்ப்பு இல்லை. அப்படி செய்து இருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக வாக்குகள் அதிகமாக கிடைத்து இருக்க வேண்டும். விக்கிரவாண்டி தேர்தலில் வன்னியர்கள் வாக்கு அதிகமாக இருக்கிறது. எனவே பாமகவுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குகள் கிடைக்கும். ஆனால் திமுக 100 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளர் என நியமித்து களமாடி வருகிறது.

அந்த வாக்குகளை வாங்கி தரும் பொறுப்பாளர்களுக்குதான் கட்சியில் மரியாதை, பொறுப்பு வழங்கப்படும் என்பார்கள். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை சொல்லும். ஆகவே சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்கள் கவனமாக பணியாற்றுவார்கள். ஆகவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய 36,000 வாக்குகளை விட அதிகம் பாமக வாங்கி விட்டாலே அவர்களின் தொண்டர்கள் விலை போகவில்லை. மக்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக களத்தில் இல்லாத நிலையில் பாமக என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News