மேகமலையும் மாஞ்சோலையை போல மாறுமா...?
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியும், மனித காலடித்தடமே படாத மாஞ்சோலை தேயிலைக் காடாக மாறுமா.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளரும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் மனிதனின் காலடித்தடங்கள் அதிகமாக படாத இடங்களில் ஒன்று மாஞ்சோலை பெருவனம். அடர்ந்த காப்பு காட்டுக்குள் அமைந்திருக்கும் மாஞ்சோலை பெருவனத்தில் 8,373.57 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனின் தேயிலைக் காடுகள்.
12- 2-1929 ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்ற பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தேயிலை காட்டு குத்தகைக்காலம் வரும் 2028ல் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
மாஞ்சோலை, காக்காச்சி ஊத்து, நாலுமுக்கு, குதிரை வெட்டி என அழகிய வனத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக, பரந்து விரிந்து கிடக்கிறது வனப்பு நிறைந்த தேயிலைக் காடுகள்.
நான்கு தலைமுறைகளாக கிட்டத்தட்ட 5,000 பேர் தேயிலை காடுகளில் பணி செய்து வந்த நிலையில், தற்போது அது 2,000 குடும்பங்களாக சுருங்கி இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டங்கள், ஒரு கட்டத்தில் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 17 பேரை அடித்துக் கொல்லும் அளவிற்கு போனது.
கூலி உயர்வு கேட்டு போராட்டங்கள் நடந்த பிறகு வனம் வனமாக இல்லை. அதிலும் சூப்பர்வைசர் அந்தோணிசாமி கொலை வழக்கு, மாஞ்சோலையின் அமைதியான வாழ்க்கை முறையை புரட்டிப் போட்டது.
2001ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாஞ்சோலைக்கு பயணித்து வருகிறேன். அன்றிருந்த அமைதி இன்று இல்லை. அம்பாசமுத்திரம் நீதிமன்றம், திருநெல்வேலி நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என்று படிப்படியாக வனத்துறைக்கும், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனுக்கும் இடையே நடந்த வழக்குகளில், தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த வனத்துறை, கடைசியாக உச்ச நீதிமன்றத்திலும் தான் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்று கடந்த 28-2-2018 அன்று மாஞ்சோலை பெருவனத்தை காப்பு காடாக அறிவித்தது.
தொடர்ச்சியாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமியோடு மோதி வந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனால், வனத்துறையிடம் மோதி ஜெயிக்க முடியவில்லை.2028 ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவடையும் போது, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் மலையை விட்டு கீழே இறங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வனத்துறை, கம்பெனிக்கு தொடர்ந்து கொடுத்த நெருக்கடியால் கம்பெனி தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
கிட்டத்தட்ட 74 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் மாஞ்சோலை பெருவனத்தில் வெறும் 8,300 ஏக்கரில் பயிரிடப்பட்ட தேயிலை, இன்றைக்கு ஆயிரம் ஏக்கராக சுருங்கி இருக்கிறது.
தரைப்பகுதியில் செயல்பட்டு வந்த பல்லுயிர்ப் பூங்காவை அதிரடியாக வனத்துறை தேயிலை காடுகளின் மத்திய பகுதியான காக்காச்சிக்கு மாற்றியது கம்பெனியை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.
வனத்துறை கொடுக்கும் நெருக்கடியால் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறும் பாம்ப பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் இன்னமும் 4 ஆண்டுகள் குத்தகை காலம் பாக்கி இருக்கும் நிலையில் இப்போதே வனத்தை விட்டு வெளியேறுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை உள்ளிட்ட மூன்று அணைகளுக்கான நீராதாரம், கூடுதலாக களக்காடு அருகேயிருக்கும் வடக்கு பச்சையாறு அணைக்கான நீராதாரம், செங்கல்தேரியில் அமையப்பெற்ற உலகம் வியக்கும் வனப்பு என அத்தனைக்கும் இந்த மாஞ்சோலை தான் அச்சாரம். கூடுதலாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாயகமும் இந்த மாஞ்சோலைப் பெருவனம் தான்.
இப்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தான், மாஞ்சோலையில் நடக்கும் கடைசித் தேர்தல் என்று நினைக்கிறேன். இனி அங்கு எந்த தேர்தலும் நடப்பதற்கான வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு வருகிறது. கம்பெனி எந்த நேரமும் தேயிலைக்காட்டை இழுத்து பூட்டுவிட்டு வெளியேறலாம் என்கிற நிலையில், பணி புரியும் 2,000 தொழிலாளர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது.
திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த மாஞ்சோலை பெருவனத்தில், இன்னமும் தேயிலை காடுகளை அனுமதிப்பதில் என் போன்றோருக்கு எவ்வித உடன்பாடும் இல்லை.
காடுகளினுடைய பரப்பை சுருக்கிக் கொண்டே வந்து விட்ட நிலையில், 2,000 பேருக்கான வாழ்வாதாரத்தை உத்திரவாதம் செய்ய அரசு முன்வர வேண்டும். குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் புலம் பெயர் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் டான் டீ யை மாஞ்சோலைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்கிற குரல்களில் எங்களை போன்றோருக்கு எவ்வித உடன்பாடும் இல்லை.
ஏனென்றால் தன் திறனற்ற நிர்வாகத்தால் டான் டீ நிறுவனம், நீலமலை மாவட்டத்திலேயே தடுமாறி வரும் நிலையில், அதை இங்கு இழுத்து வந்து இன்னமும் அரசுக்கு நஷ்டத்தை உருவாக்கக் கூடாது என்பதோடு, மாஞ்சோலை பெருவனத்தில பல்லாயிரக்கணக்கில் நிறைந்து கிடக்கும் வனவிலங்குகளுக்காகவும், எங்களுடைய குரல் உரத்து ஒலிக்கும். அதே நேரத்தில் மாஞ்சோலையில் 700 ரேஷன் கார்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அட்டைதாரர்களுக்கான வாழ்வாதாரத்தை தமிழக அரசு உத்தரவாதப்படுத்தி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் அரசு கைவசம் இருக்கும் நிலங்களில்,ஒரு ஏக்கர் நிலமும், ஒரு பசுமை வீடும் கட்டு தருவதற்கு அரசு முன் வர வேண்டும்.
இதே நிலைதான் மேகமலை பெருவனத்திற்கும்...
பல்லுயிர் பெருக்க மண்டலமாக வனத்துறையால் அறிவிக்கப்பட்ட மேகமலை பெருவனத்தில், பெயருக்கு செயல்பட்டு வரும் உட்பிரையார் உள்ளிட்ட கம்பெனிகளையும் இழுத்து பூட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி மக்களுக்கான நீராதாரத்தை உருவாக்குவதில் மேகமலை பெருவனத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.
காடு, காடாக இருந்தால்தான் நாடு நாடாக இருக்கும் என்கிற சித்தாந்தத்தை அனைவரும் உணருங்கள். விரைவில் மேகமலை பெருவனம் காப்புக் காடாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து உட்பிரயார் உள்ளிட்ட தேயிலைக்கம்பெனிகளை விரட்டி அடிப்பதற்கு இந்த சங்கம் தன்னுடைய தோழமைகளோடு களத்தில் இறங்கும்.
தேவையற்ற நிலையில் மேகமலையில் கட்டப்பட்டிருக்கும் அத்தனை சொகுசு விடுதிகளையும் தரைமட்டமாக்குவதோடு, பட்டா காடுகளுக்கான நஷ்ட ஈட்டை கொடுத்து தென்பழனி சோதனை சாவடிக்கு மேல் மனித நடமாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
வாய்ப்பு இருப்பவர்கள் உரிய அனுமதியோடு, மாஞ்சோலைக்கு ஒரு முறை சென்று வாருங்கள். காடு எத்தனை அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று நீங்கள் கண்கூடாக காண முடியும். அதே நிலையை மேகமலையிலும் உருவாக்குவோம். இந்தத் தேர்தல் மாஞ்சோலைக்கு கடைசி தேர்தல். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் மேகமலைக்கான கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.