ஆந்திராவில் ஜெகன் சறுக்கியது எங்கே?

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி இன்று அக்கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு முதல்வராக பதவியேற்கிறார்.

Update: 2024-06-12 03:58 GMT

பவன் கல்யாண், ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு (கோப்பு படம்)

2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

2019-ம் ஆண்டு தேர்தலின் போது மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில், 151 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இந்த முறை வெறும் 11 இடங்களுக்குள்ளாகச் சுருண்டுபோனது. அதேசமயம், சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

பெரும் மக்கள் ஆதரவு பெற்றிருந்த ஜெகன் சறுக்கியது எங்கே?

இது குறித்துப் பேசுகிற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் விவரப்புள்ளிகள்,

“கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் ஆந்திராவில் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தார் ஜெகன். ஆனாலும், தொழில் வளர்ச்சி இல்லாதது, வேலையில்லாத் திண்டாட்டம், புதிய முதலீடுகளைக் கொண்டு வராதது, மாநிலத்தின் கடன் ரூ.13 லட்சம் கோடியைத் தாண்டியது என ஒட்டுமொத்த மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தவறி விட்டார்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு வந்ததும், போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டதும்கூட ஜெகன் ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை ஜெகன் அரசு கைதுசெய்ததை ஆந்திர மக்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. 

'கைது நடவடிக்கை சரியாக இருக்காது’ என்று கட்சியிலுள்ள சீனியர்கள் பலரும் சொன்ன அறிவுரையை ஜெகன் சட்டை செய்யவேயில்லை. சந்திரபாபு மீது மக்களுக்கு ஏற்பட்ட அனுதாப அலை, தேர்தலில் ஜெகனுக்கு எதிராகத் திரும்பி விட்டது. இதற்கிடையே, ஜெகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸில் இணைந்து ஜெகன் அரசுக்கு எதிராகக் கடுமையாகப் பிரசாரம் செய்ததும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது” என்கின்றனர்.

ஆந்திர அரசியல் களத்தை உற்று நோக்கிவரும் அரசியல் பார்வையாளர்களோ, “தனித்துப் போட்டி என்ற ஜெகனின் தடாலடி முடிவும், பா.ஜ.க., ஜனசேனா, தெலுங்கு தேசம் என எதிர்த்தரப்பு வலுவான கூட்டணியைக் கட்டியமைத்ததும் தான் தேர்தல் ரிசல்ட் இப்படி அமைய முக்கியக் காரணம். மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிட்டு, 135 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க போட்டியிட்ட 10-ல், எட்டு தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டும் 164 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

ஆனால், 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஜெகனின் இந்தச் சரிவுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசின் மீதிருந்த அதிருப்தி மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. ‘தெலுங்கு தேசம் தலைமையில் இப்படி ஒரு வெற்றிக் கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த பவன் கல்யாணுக்குத்தான் மொத்தப் பெருமையும் சேரும்’ என்று தெலுங்கு தேசக் கட்சியினரே சொல்கிறார்கள்.

2014-ல் பவன் அரசியல் கட்சி தொடங்கும் போது, ‘அவர் மீண்டும் ஒரு சிரஞ்சீவியாக மட்டுமே அரசியலில் இருப்பார்’ என்றுதான் பெரும்பாலானோர் கிண்டல் செய்தனர். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வர, ‘தொகுதி வேண்டாம். ஆனால், ஆதரவு தருகிறேன்’ என்ற ஒப்பந்தத்தோடு தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணிக்காக தீவிரப் பிரசாரம் செய்தார் பவன். அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றிக்கு பவனும் ஒரு முக்கியக் காரணமானார்.

2019-ம் ஆண்டுத் தேர்தலில் சி.பி.எம்., சி.பி.ஐ., பி.எஸ்.பி கட்சிகளுடன் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தார் பவன். ஆனால், ஜனசேனா சார்பில் போட்டியிட்டவர்களில் ஒரேயொருவர் மட்டுமே எம்.எல்.ஏ-வானார். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பவன் கல்யாண், இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார். இருந்தபோதும் அந்தத் தேர்தலில் ஜனசேனா கட்சி 6 சதவிகித வாக்குகளை வாங்கியிருந்தது.

2019 தேர்தலில் பாடம் கற்ற பவன், இந்த முறை கூடுதல் கவனத்துடன் காய்நகர்த்தினார். தானே வலியப்போய் தெலுங்கு தேசத்துடன் கூட்டணியை உறுதிசெய்தார். அதற்குப் பிறகே பா.ஜ.க-வும் உள்ளே வந்தது. 2019 தேர்தலில் பவன் சார்ந்த சமூகமான காப்பு பிரிவினர், பவனைத் தங்களுக்கானவராக முழுமையாக நம்பவில்லை. ஆனால், அதன் பின்னர் காப்பு பிரிவினரின் நம்பிக்கையைப் பெறும்விதமாக பவன், தன்னுடைய நடவடிக்கைகளை முழுவதுமாக மாற்றிக் கொண்டார்.

அதன் விளைவு மொத்த காப்பு சமூகத்தினரின் ஆதரவும் இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. ஜனசேனாவும் போட்டி யிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று, நூறு சதவிகித வெற்றியைப் பதிவுசெய்திருப்பதோடு, மாநில எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பையும் பவனுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

அதேசமயம், `இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்ட 175 வேட்பாளர்களில் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை; பலர் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஆந்திராவில் இப்படி ஒரு தேர்தல் முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை” என்கின்றனர்.

இந்தச் சூழலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரின் வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “ஆட்சி மாறுவதற்கு முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினர் அதிகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. ஆளுநர் உடனடியாகத் தலையிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

‘ஜெகன் ஆட்சி அமைக்கும்போதும் இதே காட்சிகள்தான் நடந்தேறின... இதைத்தான் விதைத்த வினை என்கிறார்களோ...’ என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

Tags:    

Similar News