ஈரோட்டில் இந்த அளவு அதிமுக தோற்றது ஏன்?

என்னதான் பணம் கொடுத்தாலும், வாக்குகள் நம் பக்கம் மாறாது என்பது தெரிந்து அதிமுகவினர் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விட்டனர்

Update: 2023-03-07 03:30 GMT

பைல் படம்

என்னதான் பணம் கொடுத்தாலும், வாக்குகள் நம் பக்கம் மாறாது என்பது தெரிந்து அதிமுகவினர் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விட்டனர் அ.தி.மு.க.வினரின் இந்த சோர்வு வாக்கு வித்தியாசத்தில் கடுமையாக எதிரொலித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, ஓபிஎஸ் அணியினர் விமர்சனக் கணைகளை ஏவி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் பத்திரிகையாளர் குபேந்திரன் கூறியுள்ளதாவது:

கேள்வி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது, அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்கி விட்டார். இந்த முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

குபேந்திரன் : காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான். மிகப்பெரிய வித்தியாசம் தான் விவாதப்பொருளாக கிளம்பி இருக்கிறது. அதிமுக களத்தில் இறங்கி, திமுகவுக்கு இணையாக செலவு செய்து, அவர்கள் உணர்ந்தது 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வாக்குகள் வரை வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜெயிக்கக்கூடும் என கணக்கு போட்டிருந்தது. ஆனால், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது அதிமுகவுக்கு பெரிய 'ஜெர்க்'. இது எதிர்பாராத நெருக்கடி தான்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு என நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாக இருந்தாலும், டெபாசிட் கிடைத்தது எடப்பாடியின் ஆளுமைக்கு சான்றாகவே அமையும். டெபாசிட் பெரிய விஷயம்

கேள்வி : அதிமுக டெபாசிட் வாங்கியதே பெரிய வெற்றி என்ற இடத்துக்கு கட்சியை எடப்பாடி பழனிசாமி நகர்த்தி விட்டார் என்பதுதான் ஓபிஎஸ் அணியின் விமர்சனமாக இருக்கிறது..

குபேந்திரன் : எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. சந்தர்ப்ப சூழலில் பதவிக்கு வந்தவர். பலமிக்க தலைவர் இருக்கும்போதே அக்கட்சி தோற்றிருக்கிறது. 2001 தேர்தலுக்குப் பிறகு இடைத்தேர்தலில் என்ன மாதிரியான வாக்கு வித்தியாசம் இருந்தாலும் அது ஆளுங்கட்சிக்கு சாதகம் தான். திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது நடந்த இடைத்தேர்தலில் அதிமுக தோற்றிருக்கிறது. அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது நடந்த இடைத்தேர்தலில் திமுக தோற்றிருக்கிறது. ஆர்கே நகரில் ஆளுங்கட்சி 2வது இடத்திற்கும், எதிர்க்கட்சியாக இருந்த திமுக டெபாசிட் இழந்தும், சுயேட்சையாக நின்ற தினகரன் வெற்றி பெற்றார். பல்வேறு காரணிகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம். அப்படியான சூழலில், எடப்பாடி டெபாசிட் தக்க வைத்தது பெரிய விஷயம் தான்.

கேள்வி : எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தவிர 8 தேர்தல்களில் தொடர் தோல்விகளை மட்டும்தானே சந்தித்து வருகிறார்?

குபேந்திரன் : 2017 முதல் 2021 வரை எடப்பாடி பழனிசாமி பல்வேறு தேர்தல்களில் தோற்றிருக்கிறார். பொதுவாகவே ஆளுங்கட்சி இடைத்தேர்தல்களில் வெல்வது இயல்பான விஷயம். இப்போது திமுக பணம் கொடுத்து வென்றதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். 2021ல் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி தானே வென்றது? அதற்கு முன்பாக 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுக உங்களை விட அதிகமாகவா செலவழித்திருக்க முடியும்? அப்போது ஏன் தோற்றார்?

கேள்வி : தமாகா வேட்பாளர் யுவராஜா கடந்த தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகள் வாங்க முடிந்தது. ஈபிஎஸ்ஸின் நேரடி கண்காணிப்பில் இவ்வளவு முன்னாள் அமைச்சர்கள் களமிறங்கியும் அதைவிட குறைவாக வாக்குகள் பெற்றது ஏன்? எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகத்தில் தோல்வியடைந்து விட்டாரா?

குபேந்திரன் : கடந்த முறையை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியும் 15 ஆயிரம் வாக்குகள் அதிமுகவுக்கு குறைவாக கிடைத்திருக்கிறது. அதிமுகவிற்கு வரவேண்டிய வாக்குகள் கிடைக்கவில்லை. ஒருவகையில் அது எடப்பாடிக்கு தோல்வி. என்னதான் பணம் கொடுத்தாலும், வாக்குகள் நம் பக்கம் டிரான்ஸ்பர் ஆகாது தெரிந்து அதிமுகவினர் ஒருகட்டத்தில் சோர்வடைந்து பணம் கொடுப்பதை குறைத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரைக்கும் பயன்படும்படி டோக்கன்களையும் ஆளுங்கட்சி கொடுத்துள்ளது. வீட்டை காலி செய்து வேறு பகுதிகளுக்குச் சென்றவர்களுக்கெல்லாம் தேடிக் கொண்டு போய் பணம் கொடுத்துள்ளனர். இது வாக்கு வித்தியாசத்தில் எதிரொலித்துள்ளது.

பட்டுவாடாவை தொடங்கியதே அதிமுக தான். ஒவ்வொரு பூத்திலும் ஒவ்வொரு வீடாக கணக்கெடுத்து, அவர்களை தங்கள் பக்கம் திருப்புவதற்கு அதற்கேற்றபடி திட்டங்களை வகுப்பதை 2005ல் உளவுத்துறையை வைத்தே செயல்படுத்தியது அதிமுக அரசு. 2005ல் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் அதிமுக தான் முதன்முதலில் மண்டபங்களில் அடைத்து வைத்து பிரியாணி போட்ட கலாசாரத்தை தொடங்கியது. அதை விரிவுபடுத்தியது தான் திருமங்கலம் தேர்தல். இப்போது அதையே திமுக செய்வதாக அதிமுகவினர் விமர்சனம் வைக்கின்றனர். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News