தேனி தி.மு.க. நகர செயலாளர் யார்?: தொடங்கியது ரேஸ்
தேனியில் தி.மு.க.வின் அடுத்த நகர செயலாளர் யார் என்ற ரேஸ் தொடங்கி உள்ளது. நாளை இது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.;
தேனி தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் கட்சி தலைமைஅறிவித்தபடி தனது மனைவி ரேணுப்பிரியா, நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது என தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வனும் அறிவித்து விட்டார். எனவே தற்போது நகர செயலாளராக உள்ள பாலமுருகனும், அவரது மனைவி ரேணுப்பிரியா பாலமுருகனும் தி.மு.க.வின் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
அப்படி நடந்தால் தேனி நகர தி.மு.க. செயலாளர் பாலமுருகனுக்கு பதிலாக அடுத்த நகர செயலாளர் யார் என்று அறிவிக்க வேண்டும். இதற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. தலைமை இரு திட்டங்களை வகுத்துள்ளது. தேனியில் உள்ள முப்பத்தி மூன்று வார்டுகளில் முதல் பதினேழு வார்டுகளுக்கு ஒரு நகர செயலாளரும், அடுத்த பதினெட்டு வார்டுகளுக்கு ஒரு நகர செயலாளரும் ஆக இருவரை நியமிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
இதற்கான ரேஸ் தொடங்கி உள்ளது. இதில் முதல் பதினேழு வார்டுகளுக்கு ஒரு தொழிலதிபரும், அடுத்த பதினெட்டு வார்டுகளுக்கு வழக்கறிஞர் ஒருவரும் தேர்வாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.