இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
ஆந்திராவில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை சாதி அரசியலே அங்கு பிரதானமாக உள்ளது. இரு சாதிகள் ஆந்திராவை ஆண்டிருக்கும் நிலையில், ஒரு சாதி வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆந்திராவை பொருத்தவரை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளுங்கட்சியான முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும், பாஜக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.
மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
மும்முனை போட்டி: அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதியில் 17 இடங்களிலும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி இரண்டு இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஆந்திர மாநிலம் புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு, பிதாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் களம் காண்கிறார்கள்.
ஆந்திராவுக்கு ஏன் ஜெகன்மோகன் ரெட்டி தேவையா என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு தேவை இல்லை என அவரது சகோதரியான ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் தரப்பிலும் முழக்கங்களை முன்னெடுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களோடு ஏற்கனவே ஆட்சியை பறிகொடுத்த சந்திரபாபு நாயுடு பாஜக மற்றும் பவன் கல்யாண் உடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கிறார். இப்படியாக மும்முனைப் போட்டியில் ஆந்திர அரசியல் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் ஆந்திராவில் ஆட்சியாளர்களை தீர்மானிப்பதில் சாதி அரசியலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
3 முக்கிய சாதிகள்:
ஆந்திர அரசியலைப் பொறுத்தவரைக்குமே பல ஆண்டுகளாக அங்கு சாதி அரசியல் தான் பிரதானமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பான்மை சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களுக்கே தங்கள் வாக்குகளை செலுத்தி வெற்றிக்கனியை எட்ட வைத்திருக்கின்றனர்.
ஆந்திராவைப் பொறுத்தவரை ரெட்டி, நாயுடு, காபு ஆகிய மூன்று பெரும் சாதிகளே முன்னணியில் இருக்கிறது. இதில் ரெட்டி, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களாகவும், காபு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாகவும் இருந்து வந்திருக்கின்றனர்.
ரெட்டி சமூகம்:
அந்த வகையில் ரெட்டி சமூகத்தை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அரசியலில் நன்கு பயிற்சி பெற்றவர் தான். அவரது தந்தை ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அதற்கு பிறகு தான் முதல்வராக்கப்படுவோம் என ஜெகன் நினைத்தார். அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதை அடுத்து தனிக்கட்சி ஆரம்பித்த ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராகவும் இருக்கிறார்.
ஆந்திராவைப் பொறுத்தவரை ரெட்டி சமூகத்தின் செல்வாக்கு மிக அதிகமாக இருக்கிறது. அனைத்து கட்சிகளிலும் ரெட்டி சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ரெட்டி ஆதிக்கம்: ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போதும் தற்போதும் ஆந்திர மாநிலத்தில் ரெட்டி சமூகமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. ஆந்திரா மட்டுமல்லாது தற்போதைய தெலுங்கானா மாநிலத்திலும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் குழுவாகவே தொடர்கின்றனர். மேலும் தற்போதைய நவீன காலத்தில் கூட பல்வேறு அரசியல் கட்சிகளில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கூட ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
காங்கிரஸ் கட்சியின் ஒஎஸ்ஆர் ஷர்மிளாவும் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சஞ்சீவ ரெட்டி. பிரம்மானந்த ரெட்டி, சென்னா ரெட்டி போன்ற ரெட்டி முதல்வர்கள் ஆந்திராவை பல ஆண்டுகள் ஆண்டு இருக்கின்றனர்.
கம்மா (நாயுடு) சமூகம்: அடுத்ததாக கம்மா சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் ஆதிக்கமும் ஆந்திராவில் அதிகமாகவே இருந்திருக்கிறது. இவர்கள் ரெட்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். காங்கிரஸ் அல்லாமல் முதன் முதலாக ஆந்திராவில் ஆட்சியை அமைத்த என்டி ராமராவ் கம்மா சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அதன் பின்னர் அவரது மருமகனான சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து பல ஆண்டுகள் ஆந்திராவின் கிங் மேக்கராக இருந்த சந்திரபாபு நாயுடு மத்திய அரசு அமைவதில் கூட முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
மேலோட்டமாக நாயுடு சாதி என பார்த்தாலும் அவர்களுக்கு கம்மா என்று ஒரு பெயரும் இருக்கிறது. அவர்களே ஆந்திராவில் பல பகுதிகளில் குறிப்பாக கோதாவரி அமராவதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வசிக்கிறார்கள். அந்த வகையில் கம்மா நாயுடு சாதியுமே ஆந்திர அரசியலில் ஆளும் கட்சியாகவே இருந்திருக்கிறது.
காபு சமூகம்: அடுத்ததாக ஆந்திராவில் ஆளும் கட்சியை தீர்மானிக்கும் சமூகமாக காபு சமூகம் இருக்கிறது. நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யாண் காபு சமூகத்தைச் சேர்ந்தவர் தான். ஆந்திராவைப் பொறுத்தவரை காபு சமூகத்தினர் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றனர்.
ஏறக்குறைய 36 சட்டப்பேரவை தொகுதிகள் மூன்று மக்களவைத் தொகுதிகளில் காபு சமூகத்தினர் அதிக அளவில் வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் தான் பவன் கல்யாண் கட்சியினர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா அரசியலில் 17 சதவீத காபு சமூகத்தினர் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர் இது மட்டுமில்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலின மக்கள் என குறிப்பிட்ட வாக்கு வங்கியும் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக ஆந்திராவில் விளங்குகின்றன.