யார் சர்வாதிகாரி.. பா.ஜ.க -காங். கடும் மோதல்

யார் சர்வாதிகாரம் செய்தது என்பது தொடர்பாக காங்.- பா.ஜ.க இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-04-02 16:00 GMT

பைல் படம்

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தேர்தலில் நிற்க எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது காங்., கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ..க -வுடன் கடுமையாக மோதி வருகின்றனர். காங். கட்சியினர், பல இடங்களில் கைது செய்யப்படுவது, ராகுல்காந்தியின் நடைபயணம், காங். நடத்திய போராட்ட படங்களை வீடியோவாக தொகுத்து ‘‘காந்திதேசமே... காவலில்லையா, நீதிமன்றமே நியாயமில்லையா’’ என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

பதிலடியாக பா.ஜ.,வினர் இந்திரா காந்தி காலத்திலும், நேரு காலத்திலும், மன்மோகன் காலத்திலும் நடந்த பல சம்பவங்களை தொகுத்து வீடியோவும், பல்வேறு பதிவுகளும் வெளியிட்டு வருகின்றனர். பா.ஜ.கவினர் பதிலடியில் இந்திராகாந்தி தகுதிநீக்கம் செய்தது... எமர்ஜென்ஸி கொண்டு வந்தது போன்ற பல விஷயங்களை பதிவிட்டு பதிலடி கொடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து ஒரு பதிவை பார்க்கலாம்....

1975ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் ரேபரேலியில் இந்திரா காந்தி வென்றது செல்லாது என்றும், தேர்தலில் செய்த ஊழல்களின் காரணமாக இந்திரா காந்தி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடந்தாரா இந்திரா காந்தி? இல்லை! 1975 , ஜுன் 25ஆம் தேதி நள்ளிரவில் Article 352ஐ தவறாக பயன்படுத்தி அவசர நிலையைப் பிரகடனப் படுத்தினார்!. தன் அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, சர்வாதிகாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.

ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரையும் கைது செய்து சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையிலடைத்தார். வாஜ்பாய், அத்வானி ஆகிய தலைவர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.

மிசா வில் 34,988 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். டிஐஆர்-ல் 75,818 பேர் கைது செய்யப்பட்டனர். அவசர நிலையின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலரும் உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கன்னடப் பட கதாநாயகி சினேகலதா ரெட்டி கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்த பட்டார். அவரது உடல் நலம் மிகவும் மோசமானது. சிறையிலிருந்த விடுவிக்கப்பட்ட ஐந்தாவது நாளில் இறந்தே போனார்.

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அரசு பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயித்துக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் செய்ய சொன்னது இந்திரா காந்தி அரசாங்கம். அதனால் அரசு பணியாளர்கள் படிப்பறிவில்லாத மற்றும் ஏழை எளிய மக்களைக் குறி வைத்துக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் செய்து விட்டனர். பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. 253 இந்தியப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் 29 பேர் இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

BBCன் பிரபல பத்திரிகையாளர் மார்க் டூலியும் அனுமதி மறுக்கப்பட்டார். 51 வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை இந்திரா காந்தி அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. அவர்களில் 7 பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றி விட்டது. RSS, Jamat-E-Islam உள்ளிட்ட சுமார் 25 அமைப்புகள் தடை செய்யப்பட்டன.  பம்பாயில் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடக் கூட அனுமதி கேட்டபோது அரசாங்கம் மறுத்து விட்டது.

டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடியவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய்ப்பட்டார்கள். அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் டெலிபோன்களை ஒட்டுக் கேட்டது இந்திரா காந்தி அரசாங்கம். குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, உளவுத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரின் ஃபோன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டன. இப்படி ஜனநாயக விரோதமாக இன்னும் இன்னும் எத்தனையே கொடுமைகளைச் செய்தார் இந்திரா காந்தி.

பின்னாட்களில், அவசர நிலை காலத்திய கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஷா கமிஷன் பின்வருமாறு சொன்னது. அவசர நிலையானது ஜனாதிபதிக்கு எதிரான மோசடி, மந்திரி சபைக்கு எதிரான மோசடி, மக்களுக்கு எதிரான மோசடி என குறிப்பிட்டது.  .இப்படிப்பட்ட சர்வாதிகார இந்திரா காந்தியின் வழிவந்த ராகுல் காந்தி ஜனநாயகம் குறித்துப் பேசுவது நகைப்பிக்குரிய விஷயம் என பா.ஜ.க,வினர் அதிரடி காட்டி வருவது மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News