இந்திய பணம் யாரிடம் உள்ளது... உங்களுக்குத் தெரியுமா
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் 1% பேரிடம் நாட்டின் 40% க்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் இந்தியா வேகமாக வளர்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உலக பொருளாதாரம் தடுமாறும் நிலையில், இந்திய பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளது என்பதும் உண்மை தான். விரைவில் அதாவது 2035ம் ஆண்டில் இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறி விடும் என்பதும் உண்மை தான்.
ஆனால் பொருளாதார வளர்ச்சி சீராக இல்லை. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். ஏழைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பா.ஜ., அரசு கவனம் செலுத்தவில்லை. அதாவது சமச்சீரான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. மாறாக பணக்காரர்களை வளர்த்து வருகிறது என்ற பரவலான புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ஆக்ஸ்பேர்ம் ஆய்வு நிறுவனம் புதிய சர்வே நடத்தியது. இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை வெறும் 3 சதவீதம் சொத்துகளை பகிர்ந்து கொண்டுளதாகவும் ஆக்ஸ்பேம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற பொருளாதார உரிமைகள் குழு டேவோஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொருளாதார கூட்டத்தின் முதல் நாளில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியாவின் சமத்துவமின்மை பற்றி இந்த அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் தகவலின்படி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களுக்கு ஒருமுறை 5% வரி விதித்தால் அதைக் கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கிவிடலாம் என்று தெரிகிறது. 2017 முதல் 2021 வரை கவுதம் அதானிக்கு மட்டும் இதுபோன்ற ஒருமுறை பிரத்யேக வரி விதித்திருந்தால் அதன் மூலம் 1.79 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதைக் கொண்டு இந்தியாவில் உள்ள 50 லட்சம் ஆரம்பப் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி நியமித்திருக்கலாம்.
இந்த அறிக்கைக்கு 'Survival of the Richest' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்திய பில்லினர்களுக்கு குறைந்தது 2 சதவீதம் வரி விதித்தால் கூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவை, மருத்துவ சேவையை வழங்க தேவையான ரூ.40,423 கோடி பணத்தை பெறலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை உலக அளவில் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவில் மக்கள் இது பற்றி கண்டுகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை..