ஆண்டிக்கோலத்தில் பழனி முருகனை வணங்க தயக்கமா?
ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம் என்ன?. ஏன் ஆண்டிக்கோலத்தை வணங்க வேண்டும்.;
பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன்? அது சரியா?
முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்கோலத்தை ஞானதண்டாயுதபாணியை வணங்கிட பெரும்பாலான பக்தர்கள் யாரும் விரும்புவதில்லை. இக்கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தவறாகும். முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார்.
அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார்?
நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை.
ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால் தான் முடியும்’ என்பதுதான் அந்த ஆண்டிக் கோலத்தின் தத்துவம்.
தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பது தான் நிர்வாணக் கோலம். தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டு விட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.
அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர் சென்று விடுவர். இது தவறான செயல்.
தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றை துறந்து போலியில் பற்றின்றி வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
மேலும், எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும், பிணமாய் எரியும் போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது.
இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.
வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். மனம் ஒருபோதும் தடுமாறக் கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனான முருகன் பழநியில் இருக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர்.
அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானதாகச் சொன்னாலும் அதற்குரிய தத்துவம் சிறப்பானது. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடி வருபவருக்கு அருளை வாரி வழங்கவே ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார்.
அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். முருகனுக்கு உகந்த நன்னாளில் தண்டாயுதபாணியைச் சரணடைந்து செல்வமும், கந்த லோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.
வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை..
கந்தனுக்கு அரோகரா !
கடம்பனுக்கு அரோகரா !!
வேலனுக்கு அரோகரா !!!
முருகனுக்கு அரோகரா !!!!
பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா...!