உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?

30 ஆண்டுகளாக தியானம் செய்கிறேன் ஆனால், மற்றவர்களைப் போலவே உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Update: 2024-05-24 02:45 GMT

அப்படியானால் தியானத்தால் ஏற்படும் பலன்தான் என்ன? இதற்கு ராம் மனோகர் பதில்: சிலர் நினைக்கிறார்கள் தியானம் மட்டும் செய்தால் போதும் உடல், மனம், உயிர் ஆற்றல்கள் மேம்பட்டு உயர் நிலையை அடைந்து விடலாம் என்று. ஒரு வேளை யோகிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருந்திருக்கலாம். நம்மைப் போல உலகாயத்திலும் உழன்று கொண்டு, ஆற்றல்களை இழப்பதற்கான எல்லா விதமான செயல்களையும் செய்து கொண்டிருக்கும் சராசரி மனிதர்களுக்கு தியானம் மட்டும் போதாது.

உடல், உயிர் ஆற்றல்களை மேம்படுத்தும் பயிற்சிகளும் தேவையாக இருக்கிறது. நம் முன்னோர்களால் இத்தகைய பயிற்சிகளெல்லாம் அன்றாட வாழ்க்கை நடை முறைகளாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தியானத்தை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும், அவர்கள் நீண்ட ஆயுளோடு, ஆரோக்யமாக, நிறைவாக வாழ்ந்தார்கள் என்றால், காரணம் அதுதான்.

அதிகாலையில் விழிப்பது,

வயல் வெளிகளில் கடுமையாக உழைப்பது,

நேரத்திற்கு உண்பது,

சரியான பொழுதில் உறங்குவது போன்ற பல கடமைகளை அவர்கள் சீராகக் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்கள். எனவே அவர்களிடத்தில் உடலாற்றலும், உயிராற்றலும் திணிவுபட்டு விளங்கிற்று.

பக்தியிலும் அவர்களிடத்தில் ஐயப்பாடுகள் எதுவுமில்லாத, தூய நிலை இருந்தது. எனவே அது தியானத்தின் பலனையும் பெற்றுத் தந்தது. ஆனால், நம் நிலை அவ்வாறு இல்லை. எனவே நாம் தியானத்தோடு சில உடல் வலிமைக்கான பயிற்சிகளை மேற் கொள்வதோடு, உயிர் ஆற்றல் விரையத்தை தவிர்க்கவும், அதை மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும்.

சித்தர்கள் தியானம் மட்டும் செய்யவில்லை. யந்திர, தந்திர, மந்திர, ஔசதங்கள் போன்ற முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டார்கள். தாங்கள் அறிந்த நுட்பமான விஷயங்களை பாடல்களாகத் தந்து விட்டும் சென்றிருக்கிறார்கள். பொதுவாக தியானம் செய்கிறவர்கள் கண்களை நன்றாகப் பராமரிக்க வேண்டும். பயிற்சி செய்கிறேன் என்று சொல்லி கண்களை போட்டு பாடாய் படுத்தக் கூடாது.

நிறைய பேருக்கு இதனால் கண்களில் அழுத்தம் ஏற்பட்டு, பார்வைக் கோளாறு, வலி ஏற்படக் காண்கிறேன். இந்த விஷயத்தில் கவனம் தேவை. கண் பயிற்சிகள் செய்யலாம். கண்களை நல்ல தூய குளிர்ந்த நீரில் கழுவலாம். காலையில் குளிக்கும் முன்பு கால்விரல் நகங்களில் நல்லெண்ணெய் தடவி, சற்று நேரம் ஊற வைத்து பிறகு குளிக்கலாம். மதிய உணவிற்கு கீரைகள் சாப்பிடலாம். குறிப்பாக பொன்னாங்கண்ணி கீரையை வாரத்தில் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்ளலாம். இதனால் கண்கள் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

அது போல ஒருவருக்கு பற்களில் பிரச்சனை இருந்தால், அவருக்கு எல்லாப் பிரச்சனைகளும் வந்து விடும். இன்பெக்ஸன் என்று சொல்கிறார்களே ?

அந்த பிரச்சனையால் இரத்தத்தில் சலம் கலந்து விடும். இதனால் பல வியாதிகள் ஏற்படும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து போகும். பல்லில் பிரச்சனை இருப்பவர்களால் உணவுப் பொருட்களை சவைத்து, அரைத்து, உள்ளே அனுப்ப முடியாது. கோழி விழுங்குவது போல விழுங்குவார்கள். இதனால் ஜீரண மண்டலங்கள் கெடுவதுடன், மலச்சிக்கல் ஏற்பட்டு, கழிவுகள் குடலில் தங்கி, இரத்தத்தில் கலந்து சகல நோய்களையும் உண்டாக்கி விடும்.

காலையிலும், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும் பல் துலக்குவது மிக மிக அவசியமாகும். இதற்கு இன்னுமொரு பயிற்சி உள்ளது. அது என்னவென்றால், மலம் கழிக்கும் பொழுது மேல் பல் வரிசையையும், கீழ் பல் வரிசையையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வருபவர்களுக்கு பற்கள் உறுதியாக இருக்கும். ஆடிக்கொண்டிருக்கும் பல் கூட இரண்டொரு வாரங்களில் வலிமை பெற்று உறுதியாகி விடும். அதற்காக பல் துலக்காமல் இருக்கக் கூடாது. அது வேறு, இது வேறு.

அது போலவே எப்பொழுதும் உணவு உண்ணும் பொழுது வலது நாசியில் சுவாசம் ஓடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இடது நாசி ஓடிக் கொண்டிருந்தால், இதை வலது நாசியில் ஓடும்படி மாற்றி விட்டு சாப்பிட உட்கார வேண்டும். அளவோடு சாப்பிட வேண்டும். இதனால் ஜீரண மண்டலம் கெடாமல் பார்த்துக் கொள்ளலாம். அஜீரணம், அதிசாரம், குன்மம் போன்ற நோய்கள் வராது.

அது மட்டுமல்ல மலம் கழிக்கும் பொழுதும் வலது நாசியில் அதாவது சூரிய கலையில் சுவாசம் ஓடும்படி பார்த்துக் கொண்டால், நோய் அணுகாமல் காத்துக் கொள்வதோடு, நோயினால் ஏற்படும் உடல் மற்றும் உயிராற்றல் விரையத்தை தவிர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் குடிக்கும் பொழுதும், பல் தேய்க்கும் பொழுதும், இடையிடையே மூத்திரம் கழிக்கும் பொழுதும் சந்திர கலை ஓடுவது நல்லது. அதே சமயம் ஆகாரம் உண்ணும் பொழுதும், மலம் கழிக்கும் பொழுதும் வலது நாசியில் சுவாசம் ஓடுவதால் தோஷமில்லை.

சுவாசம் மாற்றுவதற்கு பல முறைகள் உள்ளன. இரண்டு எளிய முறைகளைச் சொல்கிறேன். சுத்தமான பஞ்சா சுவாசம் ஓடும் மூக்கில் வைத்து அடைத்து விட்டால், சில நொடிகளில் மற்ற நாசியில் சுவாசம் ஓட ஆரம்பித்து விடும். அல்லது எந்த நாசியில் ஓடுகிறதோ, அந்த பக்கம் கீழிருக்கும் படி ஒருக்களித்துப் படுத்தால் சில நொடிகளில் சுவாசம் மாறி விடும். இன்னும் வேறு சில யுக்திகளும் உண்டு. விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக மதிய உணவுக்குப் பிறகு ஒரு சீப்பை எடுத்து 5 நிமிடங்கள் தலையை சீவும் பழக்கத்தை கை கொள்ள வேண்டும். இதனால் தலை முடி நரைப்பது, கொட்டுவது, வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. மரக்கட்டை சீப்பாக இருந்தால் மிகவும் நல்லது. இதனால் மேற்படி பிரச்சனைகள் மட்டுமல்ல, தலைவலி, சிரசில் ஏற்படும் பல நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, பாரிச வாதம் என்ற நோய் முற்றிலுமாக குணமாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் வழுக்கைத் தலையில் முடி முளைக்காது. இளம் வயதிலிருந்தே இந்த பழக்கம் இருந்தால் நல்லது. வழுக்கை உள்ளவர்கள் வெறும் தலையில் சீவலாம். மற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பிராணாயாமப் பழக்கம் உள்ளவர்கள் சுவாசத்தை தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்வார். மற்றவர்கள் சுவாசத்தை மாற்றிக் கொள்ளும் யுக்திகளைக் கற்றுக் கொள்வது நல்லது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, அதிசாரம் போன்ற நோய்கள் தாக்கப்பட்டவர்களுக்கு இடது சுவாசமே ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதை வலது நாசியில் ஓட விட்டு விட்டு மருந்து கொடுத்தால் உடனே கேட்கும். இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், இப்படி உடலையும், உயிரையும் பேணிக் காக்கும் எந்தவித யுக்திகளையும் கை கொள்ளாமல், வெறும் தியானம் மட்டுமே செய்கின்ற பொழுது, தியானத்தில் முழுமையான பலன் நமக்கு கிட்டாமல் போய் விடுகிறது என்பதை சுட்டிக் காட்டவே இதையெல்லாம் சொல்கிறேன். இந்த பழக்கங்களெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவைகள் தாம். காலப் போக்கில் அவற்றையெல்லாம் நாம் இழந்து விட்டோம்.

மேற்கூறிய பழக்கங்களை தங்கள் நித்தியப் பழக்கங்களாக ஒருவர் கொண்டு வந்து விட்டால், அவரை எந்த நோயும் அணுகாது. மேலும் அவர்கள் உடல் மற்றும், உயிராற்றல்கள் மேம்படும். எனவே சூரிய கலையில் ஆகாரம் எடுத்துக் கொள்வது, மலம் கழிப்பது. சந்திர கலையில் பல் தேய்ப்பது, தண்ணீர் குடிப்பது, மூத்திரம் பெய்வது, இரவு உணவிற்குப் பிறகு சற்று உலாவி விட்டு பிறகு படுக்கைக்குச் செல்வது, படுக்கும் பொழுது இடது பக்கமாகப் படுப்பது போன்ற பழக்கங்கள் நிரந்தர ஆரோக்கியத்திற்கு வழிவகுத்து, தியானத்தை எளிதாக அடைவதற்கு உதவி செய்யும். இன்னும் நிறைய இருக்கின்றன. 

Tags:    

Similar News