வறுமையின் பிடியில் மக்கள் என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ?
கடந்த ஒரு வாரமாக நடந்த 2 சம்பவங்களும், கடந்து போன 2 பண்டிகைகளும் பெரும்பாலான மக்கள் வறுமையில் உள்ளதை உணர்த்துகிறது
கடந்த வாரம் இலவச சேலை வாங்க குவிந்த கூட்டத்தின் நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிறது. இந்த சம்பவத்தை தமிழக அரசு ஏதோ ஒரு சாதாரண விபத்து போல் தான் அணுகிறது. இது தான் இதனை விட பயங்கரமான அதிர்ச்சியாக இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ பேசியும் அரசு இச்சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை.
காஞ்சிபுரத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அழகுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை மக்கள் எடுத்துச் சென்ற வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகை எந்தவித ஆராவரமும், ஆர்ப்பாட்டமும் இன்றி கடந்தது. துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில் வியாபாரம் பெரும் அளவு சரிந்தது. அதற்கு முன்னர் வந்த தீபாவளி பண்டிகையின் போதும் இதே கதை தான். பொங்கல் பண்டிகைக்கு அரசு ஆயிரம் ரூபாயாவது கொடுக்குமா என்ற சந்தேகத்தில் தான் பலர் இருந்தனர். அது தான் உண்மை. இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாய் கேட்டு வந்த மீம்ஸ்களை கூட மக்கள் ரசிக்கவில்லை. காரணம் ரேஷன் கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது மக்களுக்கு தெரியும்.
இந்த பண்டிகைகளும், நடந்து முடிந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தில் வறுமையின் பிடியில் மக்கள் அதிகளவில் சிக்கியுள்ளனர் என்பதை தான் உறுதிப்படுத்துகிறது. பல லட்சம் நடுத்தர குடும்பங்கள் கூட வறுமைக்கோட்டுக்கு கீழ் வந்து விட்டனர் என்பதும் மறுக்கவே முடியாத உண்மை தான். இதில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்தை அரசு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்ளும் வேதனைகளும் நடந்து கொண்டு தான் உள்ளது.
பணக்காரர்கள் மட்டும் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏழைகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவு கட்ட தமிழக முதல்வர் விரிவான தெளிவான பொருளாதார கொள்கையினை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.