முதல்வரின் கவனத்திற்கு சென்ற தேனி நகராட்சி 32 வது வார்டு பிரச்னை

தேனி நகராட்சி 32 வது வார்டின் முக்கிய பிரச்னை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் கூறினார்;

Update: 2022-02-08 07:45 GMT

திமுக வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம். 

தேனி நகராட்சியில் 32வது வார்டில் உள்ள முக்கியமான பிரச்னை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 32வது வார்டில் தி.மு.க.வின் வி.ஐ.பி., வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம் உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கி உள்ளார். 32வது வார்டு என்றவுடன் ஏதோ ஒரு ஒதுக்குப்புறமான பகுதி என நினைத்து விட வேண்டாம். இது தான் தேனியின் மிக முக்கிய குடியிருப்பு பகுதியாக உருவாகி உள்ளது. தேனியில் அசுர வேகத்தில் வளரும் வி.ஐ.பி., குடியிருப்பு பகுதியும் இது தான். இங்கு கழிவுநீரை கடத்திச் செல்வது மிகவும் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள கர்னல்பென்னிகுக் நகர், காந்திஜிரோடு, சோலைமலை அய்யனார் ரோடு, குயவர்பாளையம் பகுதியில் கழிவுநீரை கடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. பெரும்பாலும் இங்குள்ள வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை பூமியில் குழிதோண்டி உள்ளே இறக்கி வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு 200 மீட்டர் துாரத்தில் முல்லைப்பெரியாறு ஓடுகிறது.

மழை பெய்தால் இப்பகுதி கழிவுகள் முழுக்க முல்லைப்பெரியாறுக்கு சென்று விடும். இதனால் நீர்மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். இங்கு வேட்பாளராக களம் இறங்கி உள்ள செல்வம் ஓட்டு சேகரிக்க சென்ற போது, இப்பகுதி மக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து முறையிட்டனர். இந்த மக்களிடம் வழக்கறிஞர் செல்வம் கூறியதாவது: இங்கு கழிவுநீரை சேகரிக்க ஒருங்கிணைந்த ராட்சத தொட்டி கட்ட வேண்டும். இப்பகுதி குடியிருப்புகள் முழுவதும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்து கழிவுநீரை அந்த தொட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த தண்ணீரை பம்ப் செய்து, நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த பல கோடி ரூபாய் நிதி தேவைப்படும். எனவே இந்த பிரச்னை குறித்து தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ்செல்வனிடமும், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமரிடமும் தெரிவித்தேன். அவர்கள் இதனை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். முதல்வர் கவனத்திற்கு பிரச்னை கொண்டு செல்லப்பட்டு விட்டதால், தேர்தல் முடிந்ததும் வெகு விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று பிரச்னைகளை தீர்த்து வைப்பேன் என்று  மக்களிடம் உறுதியளித்தார்.

Tags:    

Similar News