கண்டமனூரில் மீண்டும் வாரச்சந்தை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி கண்டமனுாரில் வாரச்சந்தை செயல்பட தொடங்கியதால், பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

Update: 2022-08-12 02:15 GMT

கண்டமனுார் வாரச்சந்தையில் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கும் மக்கள்.

கண்டமனூர் கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. கண்டமனூர் கிராமத்தை சுற்றிலும் கோவிந்தநகரம், புதூர், ராமச்சந்திராபுரம், அண்ணாநகர், ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், கணேசபுரம், எட்டப்பராஜபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் முதன்மை தொழிலாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் விளை பொருட்களை தேனி, சின்னமனூர் கம்பம், ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

விளைபொருட்களை நீண்ட தொலைவில் அமைந்துள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைப்பதால் பயணச் செலவு காரணமாக லாபம் பாதியாக குறைந்து விடுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கண்டமனூர் கிராமத்தில் புதிதாக வாரச்சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கண்டமனூர் கிராமத்தில் புதிய வாரச்சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வாரச்சந்தை திறப்பு விழா நடைபெற்றது. சந்தை துவங்கப்பட்டு உள்ளதால் கண்டமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் அவர்களது விளைபொருட்களை நேரடியாக சந்தைகளில் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News