நியூட்ரினோ,மேகமலை குடியிருப்பு,முல்லை பெரியாறு: நழுவும் அரசியல் கட்சிகள்

தேனி மாவட்ட முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் முக்கிய அரசியல் கட்சிகள் கூட பின் வாங்குவதால்,மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Update: 2021-08-26 07:45 GMT

மேகமலை புலிகள் சரணாலயத்தில் உற்பத்தியாகி தேனி மாவட்டத்தில் பாயும் வைகை நதி (இடம்: குன்னுார்)

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் கட்டும் பணி, மேகமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணி, முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணி ஆகிய மூன்று மிகப்பெரிய பிரச்னைகளில் மக்களை கையாள்வது எப்படி என்பது குறித்து எதிர்க்கட்சிகளிடமும், ஆளும் கட்சியினரிடமும் தெளிவான அணுகுமுறை இல்லை.

தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய தலையாய பிரச்னை முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் கூட இதுவரை அணை நீர் மட்டத்தை 142 அடி வரை கூட உயர்த்த முடியவில்லை. அதிகம் மழை பெறும் காலங்களில் நீர் மட்டத்தை 136 அடி வரை உயர விடாமல் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளே கண்காணித்துக் கொள்ளும் அளவுக்கு தமிழக அரசின் அணுகுமுறை பலகீனமாக உள்ளது. கேரள அரசு எந்த ஒரு பேச்சுவார்த்தை முடிவுக்கும் கட்டுப்படாமல், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை நீரை பல இடங்களில் தடுப்பணைகள் கட்டி வனப்பகுதிக்குள்ளே மாற்றுப்பாதையில் திருப்பி, இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது.

முல்லை பெரியாறு 

தமிழக அரசும் இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இறந்த பின்பு முல்லை பெரியாறு அணை பிரச்னையை கையாள்வதற்கு ஆட்கள் இல்லையோ என்கிற அளவுக்கு இரு முக்கிய கட்சிகளின் செயல்பாடும் உள்ளது. இந்த அமைதி நிலை மக்களுக்கு  நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த பிரச்னை நியூட்ரினோ ஆய்வகம் கட்டும் பணி. இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாவிட்டாலும், நியூட்ரினோ ஆய்வகம் குறித்த தெளிவு மக்களிடம் இல்லை. இரண்டு முக்கிய கட்சிகள் இதில் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளனர் என்ற விவரங்களும் மக்களுக்கு தெரியவில்லை. இந்த பிரச்னையிலும் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நழுவும் பாணியிலேயே செயல்பட்டு வருகின்றன.

தற்போது தீயாய் பற்றி எரிவது மேகமலை புலிகள் சரணாலயம் குறித்த அறிவிப்பு. தமிழகத்தில் வனப்பரப்பில் முதலாவது மிகப்பெரிய சரணாலயம் என்ற பெயர் பெற்றுள்ள மேகமலை புலிகள் சரணாலயத்திற்குள் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களை வனத்துறை வெளியேற்றப்போகிறதா? அல்லது மாற்று வேலை வாய்ப்பு வழங்கப்போகிறதா? இதில் வனத்துறை என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது. இதனை அரசியல் கட்சிகள் எப்படி அணுகுகின்றன என்ற குழப்பமும் நீடிக்கிறது.

கடந்த திங்கள் கிழமை கூட இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கேட்ட போதும் கூட தெளிவான பதில் யாராலும் சொல்ல முடியவில்லை. சட்டசபை கூட்டத்தொடரில் வனப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாற்று வாழ்வியல் வழிமுறைகளோடு வெளியேற்றப்படுவார்கள் என வனத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆனால் மேகமலையில் உள்ள மக்கள் கேட்பது கிடைக்குமா? அல்லது அரசு இவ்வளவு தான் தர முடியும் வெளியேறு என சொல்லப்போகிறதா என்பது குறித்த தெளிவு, வனத்துறையிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ இல்லை. ஏன் தமிழக அரசிடம் கூட இல்லை.

தி.மு.க.,வும் சரி, அ.தி.மு.க.,வும் சரி இந்த மூன்று முக்கிய பிரச்னைகளிலும் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை. சந்தர்ப்பம், சூழலுக்கு ஏற்றவாறு  மாறி, மாறி பேசி மக்களை குழப்பி வருகின்றனர். இந்த குழப்பம் மக்கள் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்து அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. 

Tags:    

Similar News