முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு: பாதிக்கப்படும் சிறு விவசாயிகள்
முல்லை பெரியாற்றில் இருந்து ராட்சத பைப் லைன்கள் மூலம் தண்ணீரை திருடி கிணற்றி்ல் நிரப்பி விவசாயம் செய்கின்றனர்.;
முல்லை பெரியாற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திருடப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மௌனமாகி விட்டார். அவரது மௌனம் தற்போது பல விவசாயிகளை வீழ்த்தப்போகிறது. பல லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தடுக்க போகிறது.
முல்லை பெரியாற்றில் இருந்து பைப் லைன்கள் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்துச் சென்று கிணறுகளில் நிரப்பி விவசாயம் செய்கின்றனர். முல்லை பெரியாற்றில் வைரவனார் அணையில் தொடங்கும் தண்ணீர் திருட்டு, தேனி வரை நீடித்து வைகை அணையில் இருந்தே தண்ணீர் திருடும் அளவுக்கு வளர்ந்து, மதுரை வரை நீடிக்கிறது.
அதாவது இப்பிரச்னை தேனி, மதுரை மாவட்டங்கள் முழுக்க உள்ளது. இப்படி செய்பவர்கள் அத்தனை பேரும் உச்ச அதிகார மட்டத்தில் இருப்பவர்களும், இருந்தவர்களும் அவர்களும் பினாமிகளும் தான். இதனால் யாராவது இது பற்றி கேட்டால் அவர்கள் நிலை அதோகதியாகி விடும்.
இது பற்றி நன்கு தெரிந்தும் விவசாய சங்கங்களே பின்வாங்குகின்றன, அமைச்சர் கூட மௌனமாகி விட்டார் என்றால் இந்த 'தண்ணீர் மாபியாக்களின்' பலத்தை பாருங்கள்.
இதனால் என்ன பிரச்னை என கேட்காதீர்கள். குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல் பல கிராம ஊராட்சிகள் தவிக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. சிறு விவசாயிகள் யாருடைய நிலத்திற்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. மிகப்பெரிய அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தண்ணீர் திருடி விவசாயம் செய்யலாம், மற்றவர்களுக்கு விவசாயம் செய்யும் உரிமை கூட இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
இது மிகவும் பெரிய அபாயகரமான நிலையாக மாறி வருகிறது. காரணம் முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருடி விவசாயம் செய்பவர்களின் பட்டியலை பார்த்தால் தலை சுற்றிவிடும். இவர்களை தடுக்கும் அதிகாரமும், அதற்கான பவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. அவர் மனது வைத்து இந்த குற்றங்களை தடுத்தால் சிறிய விவசாயிகளுக்கு நீதியும், நீரும் கிடைக்கும். மக்களுக்கும் குடிநீரும் கிடைக்கும்.
இந்த விவகாரம் தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் கடுமையாக பரவி, விவசாயிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்த அபாயத்தை தடுக்காவிட்டால் சிறு விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து விட்டு பிச்சையெடுக்க வேண்டியது தான். முல்லை பெரியாற்றினை திருட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் என பல ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.