இன்று விறுவிறுப்பாக நடைபெறும் வியாபாரம் எது தெரியுமா? கொடுமைங்க..! (Exclusive)
தமிழக அளவில் தண்ணீர் வியாபாரமே இன்று இதர வியாபாரங்களை விட முன்னணியில் உள்ளது.;
வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், பொது இடங்கள், சினிமா திரையரங்குகள், மருத்துவமனைகள், சுற்றுலா தளங்கள், கோயில் விழாக்கள், விழா திடல்கள், கோயில்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விசேஷ நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் நிறைந்திருக்கும் ஒரு விஷயம் தண்ணீர் பாட்டில்கள். 300 மி.லி., 500 மி.லி., ஒரு லிட்டர்., 2 லிட்டர்., 20 லிட்டர் என பல்வேறு வடிவங்களில் தண்ணீ்ர் கேன்கள் விற்கப்படுகின்றன.
குடிநீர் இப்படி ஒரு வணிக பொருளாக மாறும் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாராலும் கணித்திருக்கவே முடியாது. அந்த அளவு தற்போது குடிநீர் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் தெருத்தெருவிற்கு குடிநீர் கேன் விநியோகிக்கும் கடைகளும், விநியோகஸ்தர்களும் உள்ளனர். இவர்களே எந்த விசேஷ நிகழ்ச்சிகளாக இருந்தாலும் குடிநீர் கேன் ஆர்டர் எடுக்கின்றனர். சரியான நேரத்திற்கு சப்ளை செய்கின்றனர்.
பெருமாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என அத்தனை உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீர் விநியோகம் செய்தாலும், மக்கள் கேன்களை வாங்க காரணம் என்ன? உள்ளாட்சிகள் விநியோகம் செய்யும் தண்ணீரில் நம்பகத்தன்மை இல்லை. பல உள்ளாட்சிகளில் பல அல்ல... மிகப்பெரும்பாலான உள்ளாட்சிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. விநியோகிக்கப்பட்டாலும், கழிவுநீர் கலந்தே வருகிறது என அடுக்கடுக்காக உள்ளாட்சி குடிநீர் மீது புகார்கள் உள்ளன.
உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் செய்யும் குடிநீர் மீது மக்களுக்கு எப்போது நம்பிக்கை வருகிறதோ அப்போது தான் குடிநீர் கேன்களின் விற்பனை சற்று கட்டுப்பாட்டுக்குள் வரும். அதுவரை குறைந்த முதலீடு, அதிக லாபம் என்ற இலக்கில் தற்போது முந்திச் செல்லும் ஒரே தொழில் குடிநீர் பாட்டில் வியாபாரம் மட்டுமே என வியாபாரிகளே தெரிவித்தனர்.