ரூல்கர்வ் முறைப்படி ஏன் 141 அடி நீரைத் தேக்கவில்லை: தமிழக விவசாயிகள் அதிருப்தி

ரூல்கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணையில் 141 அடி தண்ணீர் தேக்கவில்லை என ஐந்து மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பினர்

Update: 2021-11-16 12:15 GMT

முல்லை பெரியாறு அணை பைல் படம்

முல்லைபெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே 141 அடி நீர் தேக்கியிருக்க வேண்டும். அதனை ஏன் செய்யவில்லை என விவசாயிகள் காட்டத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையி்ல் ரூல்கர்வ் முறை அமலுக்கு வந்ததை காரணம் காட்டி தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கடந்த மாதம் 29ம் தேதி கேரள அமைச்சர்கள் கேரளா வழியாக தண்ணீர் திறக்க அனுமதித்தனர்.

கடந்த ஒரு வாரமாக கேரளா வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதே ரூல்கர்வ் முறைப்படி மூன்று நாட்களுக்கு முன்பே முல்லை பெரியாறு அணையில் 141 அடி நீர் தேக்கியிருக்க வேண்டும். ஏன் இதுவரை 141 அடி நீரை தேக்கவில்லை. அடுத்து நாம் 142 அடிநீரை தேக்க நவம்பர் 30ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அணையில் 141 அடி நீரை தேக்கிய பின்னர் தினமும் ஒரு பாயிண்ட் வீதம் நீர் மட்டத்தை உயர்த்திக் கொண்டே வந்து, நவம்பர் 30ம் தேதி அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியும்.

நீரை திறந்து விட மட்டும் ரூல்கர்வ் முறையினை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், அதே ரூல்கர்வ் முறைப்படி தண்ணீரை தேக்கியிருந்தால் நம் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கும். 141 அடி தண்ணீர் தேக்க உரிமை கிடைத்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தேக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News