பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென சரிவு
தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாததால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளது.;
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை மழை பெய்தது. அப்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி பின்னர் இறங்கியது. டிசம்பர் மாதம் 10ம் தேதிக்கு பிறகு படிப்படியாக மழை குறைந்தது. 15ம் தேதிக்கு பின்னர் மழை நின்று விட்டது. தற்போது மார்ச் மாதம் ஆன நிலையிலும், இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும் படியாக மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் அணைகளின் நீர் வரத்து சரிந்தது. பாசனத்திற்கு நீர் தொடர்ந்து எடுக்கப்பட்டதால், நீர் மட்டமும் வேகமாக குறைந்தது.
தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118 அடியை தொட்டு விட்டது. அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து குடிநீருக்கும், பாசனத்திற்கும் சேர்த்து விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர் மட்டம் 53.67 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 105 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் மட்டும் 58 கிராம குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 72 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணை நீர் மட்டம் 38.65 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 18.36 அடியாகவும், சண்முகாநதி நீர் மட்டம் 27.40 அடியாகவும் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அணைகளின் நீர் மட்டம் சரிந்துள்ளதால், இனி வரும் மாதங்களுக்கு தேனி மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. காரணம், ஜூன் மாதம் தான் இனிமேல் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரம் தான் பலத்த மழை எதிர்பார்க்க முடியும். அதுவரை குடிநீர் தேவையினை சமாளிக்க அணைகளில் தற்போது உள்ள நீர் மட்டும் தான் உள்ளது.
தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு வேறு புதிய நீர் வாய்ப்புகள் எதுவும் இல்லை. எனவே கோடைமழை பெய்து சற்று ஆறுதலுக்காக கை கொடுக்குமா என விவசாயிகளும், பொதுமக்களும் ஏக்கத்தில் உள்ளனர்.