மாஸ்க் போடச்சொன்ன அதிகாரிக்கு கிராம மக்கள் தர்ம அடி: கலெக்டர், எஸ்.பி. 'டென்ஷன்'
மாஸ்க் போடச் சொல்லி அறிவுறுத்திய அதிகாரியை தாக்கி அசிங்கப்படுத்தியவர்களை கைது செய்ய கலெக்டரும், எஸ்.பி.,யும் உத்தரவிட்டுள்ளனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மிகவும் பொறுப்பான, நேர்மையான, பணித்திறன் நிறைந்த அதிகாரி ஒருவர் நேரு சிலை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலுக்கு உணவு பார்சல் வாங்க சென்றார். அந்த ஓட்டலில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மாஸ்க் அணியவில்லை. திடீரென தும்ம தொடங்கினார்.
ஒருமுறை, இருமுறை அல்ல... தொடர்ச்சியாக பலமுறை தும்மினார். இதனை பார்த்த அந்த அதிகாரி, முதியவரிடம் சென்று, 'ஐயா, இது மக்கள் அதிகம் வரும் பெரிய ஓட்டல். தற்போதே பலர் சாப்பிட்டுக் கொண்டு உள்ளனர். நீங்கள் மாஸ்க் அணியாமல் இத்தனை முறை தும்மினீர்கள். இது ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவும் காலம். நீங்கள் தும்மியதை பார்த்தால் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது என தோன்றுகிறது. உங்களுக்கு ஏதாவது தொற்று இருந்தால், நீங்கள் தும்மியதன் மூலம் தற்போது இங்கு சாப்பிடுபவர்களும், இந்த ஓட்டலுக்கு வருபவர்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே முதலில் மாஸ்க் போடுங்கள்' என கூறியுள்ளார்.
அந்த முதியவரும் ஓட்டல் வாசலுக்கு வந்து தனது வண்டியில் வைத்திருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் மாட்டிக் கொண்டு மீண்டும் ஓட்டலுக்கு உள்ளே வந்தார். இதற்குள் அந்த அதிகாரி ஆர்டர் கொடுத்த பார்சலை கட்டி கொடுத்து விட்டனர். தனது பார்சலை வாங்கிக் கொண்டு அவர் ஓட்டல் வாசலுக்கு வந்ததும், எங்கிருந்தோ வந்த ஒரு வாலிபர், அந்த அதிகாரியை கடுமையாக தாக்கி விட்டார்.
நிலை குலைந்த அந்த அதிகாரி, சுதாரிக்கும் முன்னர், பெண்கள் சிலர் சூழ்ந்து கொண்டு மிகவும் தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினர். தான் எதுவும் செய்யாத நிலையில், ஏன் இப்படி தாக்குகிறீர்கள் என அதிகாரி கேட்டுள்ளார். என் மாமாவை மாஸ்க் போட சொல்ல நீர் யார்? அவர் மாஸ்க் போட்டால் என்ன... போடாவிட்டால் என்ன...? மரியாதையாக நடந்து கொள் என எச்சரித்துள்ளனர்.
இதற்கு தான் தன்னை தாக்கி, திட்டி அசிங்கப்படுத்தி உள்ளார்கள் என தெரிந்து கொண்ட அதிகாரி, (கலெக்டர், எஸ்.பி.,யுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்திருப்பவர்) உடனே கலெக்டருக்கு போன் செய்துள்ளார். கலெக்டர் போனை எடுத்ததும், 'சார், மாஸ்க் போட சொன்னதற்காக என்னை தாக்கி விட்டனர்' என கூறியுள்ளார்.
டென்சன் ஆன கலெக்டர் முரளீதரன், எஸ்.பி.,யிடம் நேரடியாக பேச, அடுத்த ஓரிரு நிமிடங்களில் தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ் போலீஸ் குழுவினருடன் அந்த இடத்திற்கு வந்து விட்டார். அந்த ஓட்டல், தேனி நேருசிலை அருகே உள்ளது. அங்கு போலீசார் வைத்திருக்கும் கண்காணிப்பு கேமராவில் நடந்த அத்தனை விஷயங்களும் பதிவாகி உள்ளன. போலீசார் சூழ்ந்ததும், அதிகாரியை தாக்கிய கும்பல் தப்பி சிதறி ஓடியது. ஆனால் அவர்களை கைது செய்ய சொல்லி கலெக்டரும், எஸ்.பி.,யும் உத்தரவிட்டதால், இன்ஸ்பெக்டர் சுரேஷ் தப்பிய கும்பலை சில நிமிடங்களில் துாக்கி விட்டார்.
அத்தனை பேரையும் தேனி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து வைத்துக் கொண்டு புகார் கொடுக்க வருமாறு அந்த அதிகாரிக்கு போன் செய்து, இன்ஸ்பெக்டர் அழைத்துள்ளார். ஸ்டேஷனுக்கு வந்த அதிகாரி, 'சார், இவர்கள் கிராம மக்கள் (சின்னமனுார் அருகே முத்தலாபுரம் கிராமம்). இவர்களுக்கு கொரோனா தொற்றின் சீரியஸ் தெரியவில்லை. அதனால் தவறாக புரிந்து கொண்டு என்னை தாக்கி விட்டனர். தயவு செய்து இவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களை தண்டிப்பது என் நோக்கம் இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாஸ்க் போட வைக்க வேண்டும். அது மட்டுமே எனது நோக்கம்.
எனவே புகார் தரமாட்டேன் என கூறி விட்டார். அந்த அதிகாரியே கலெக்டர், எஸ்.பி.,யிடம் நேரடியாக பேசி, அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அவர்கள் செய்த தவறு முழுவதும் முழு ஆதாரத்துடன் கிடைத்ததால், வழக்கு பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு கடும் தண்டனை கிடைத்திருக்கும். இருப்பினும் அதிகாரி பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டதால், அந்த கிராம பெண்களும், தாக்கிய இளைஞரும் அந்த அதிகாரியிடம் மாறி, மாறி மன்னிப்பு கேட்டுக்கொண்ட பின்னர் தனது கிராமத்திற்கு சென்றனர்.