தேனி- அரண்மனைப்புதுார்- வீரபாண்டி ரோடு விரைவில் அகலப்படுத்தப்படுமா?
தேனியில் இருந்து அரண்மனைப்புதுார் வழியாக வீரபாண்டி செல்லும் ரோட்டை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி அரண்மனைப்புதுார் விலக்கு தேனி- மதுரை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கிருந்து அரண்மனைப்புதுார், முல்லைநகர், தட்ஷிணாமூர்த்தி கோயில், வயல்பட்டி வழியாக வீரபாண்டிக்கு குறுகிய தார்ச்சாலை செல்கிறது. இந்த ரோட்டினை அகலப்படுத்தி பைபாஸ் ரோடாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்படி இந்த ரோட்டை அகலப்படுத்தி பைபாஸ் ரோடாக மாற்றினால் மதுரையில் இருந்து தேனியை கடந்து கம்பம், குமுளி செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராமல் பைபாஸ் ரோடு வழியாக சென்று விடும். அதேபோல் குமுளி, கம்பம் பகுதியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்களும் தேனி நகருக்குள் வராமல் கடந்து சென்று விடும்.
இதனால் மட்டும் நகரில் பெருமளவு நெரிசல் குறையும். தற்போது ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த இடத்தில் நெரிசல் பல மடங்கு அதிகரிக்கும். அதனால் நகர் பகுதிக்குள் நெரிசல் அதிகரிக்கும். காரணம் அரண்மனைப்புதுார் விலக்கு, பங்களாமேடு சந்திப்பு, பெரியகுளம் ரோட்டில் பெத்தாட்ஷி விநாயகர் கோயில் அருகே மூன்று ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒண்ணரை கி.மீ., துாரத்திற்குள் மூன்று கேட்களை அமைத்து மீண்டும் திறப்பதால் நகர்பகுதிக்குள் கடும் நெரிசல் நிலவும் அந்த நேரத்தில் அரண்மனைப்புதுார் பைபாஸ் ரோட்டின் வழியாக வாகனங்களை அனுமதித்தால், நெரிசல் ஓரிரு நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வரும். எனவே தற்போது இந்த ரோடு அவசியமாகிறது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.