வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா: தேனி போக்குவரத்தில் மாற்றம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக தேனி போக்குவரத்தில் வரும் மே 10ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது;

Update: 2022-05-07 09:40 GMT

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா வரும் மே 10ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி, மே 17ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடக்கிறது. இந்த ஒரு வாரமும் மக்கள் கூட்டம் அலைமோதும். தினமும் குறைந்தது 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் பேர் வரை வருவார்கள். விழாத்திடல் மட்டும் 4 கி.மீ., துாரத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த திடலில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்திருப்பார்கள். 24 மணி நேரமும் விழா இடைவிடாமல் நடைபெறும். கோயில் நடை சாத்தப்படுவது இல்லை. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக வீரபாண்டி விழா திடலின் இரு முனைகளிலும் இரண்டு தற்காலிக பஸ்ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் முழுவதும் இருந்து 24 மணி நேரமும் விழாத்திடலுக்கு சிறப்புபஸ்கள் இயக்கப்படும். தவிர திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பிற்காக தற்போது வரை 75 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொறுத்தி உள்ளனர். இதன் எண்ணிக்கை 100 வரை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. விழாத்திடலை ஊடுறுவி பஸ்கள் செல்ல முடியாது. எனவே தேனி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

தேனியில் இருந்து கம்பம் செல்லும் பஸ்கள் உப்புக்கோட்டை விலக்கு வழியாக திரும்பி உப்புக்கோட்டை, குச்சனுார், மார்க்கையன் கோட்டை, சின்னமனுார் வழியாக உத்தமபாளையம், கம்பம், குமுளி செல்லும். குமுளி, கம்பம், உத்தமபாளையத்தில் இருந்து வரும் பஸ்கள் உப்பார்பட்டி விலக்கு வழியாக தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக தேனி வந்து சேரும் வகையில் மாற்றப்பட உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News