வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு கூட்டம் அதிகம் வந்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் கொரோனா பேரிடர் காரணமாக தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயி்ல் விழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மாதம் கொடிமரம் நட்டதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 10ல் தொடங்கியது. மே 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட கூடுதல் கூட்டம் வரும் என போலீசார் மதிப்பீடு செய்திருந்தனர். ஆனால் போலீசார் மதிப்பிட்டதை விட பல மடங்கு அதிக கூட்டம் வந்து கொண்டுள்ளது.
வழக்கமாக விழாத்திடல் 4 கி.மீ., நீளம் இருக்கும். இந்த ஆண்டு அந்த திடல் ஏழு கி.மீ., ஆக அதிகரித்துள்ளது. இந்த ஏழு கி.மீ., துாரமும் இருபுறமும் கடைகளும், பக்தர்கள் நெரிசலும் வீரபாண்டி திருவிழா வரலாற்றில் இதுவரை இல்லாதது என போலீசாரே மிரண்டு போய் உள்ளனர். தேனியில் இருந்து வீரபாண்டி விழாத்திடல் ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த ஏழு கி.மீ., துாரத்தை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அந்த அளவு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. விழாத்திடலுக்கு வர 8க்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. அத்தனை வழிகளிலும் பக்தர்கள் நெரிசல் அலைமோதுகிறது. பொழுது போக்கு அம்சங்கள் உள்ள இடங்களில் எள் கூட கீழே விழாத அளவு நெரிசல். பக்தர்கள் மூச்சுவிடவே திணறும் இந்த நெரிசல் மட்டும் 4 கி.மீ., நீளம் நீள்கிறது. கோயிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்தவர்கள் அவர்கள் அதிர்ஷ்ட்சாலிகள் என்ற நிலையே காணப்படுகிறது. விழாவிற்கு வருபவர்களில் மிகப்பெரும்பாலானோர் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் திரும்ப செல்கின்றனர். பலர் தேரில் பவனி வரும் உற்சவரை மட்டும் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்த ஆண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்பு பணிக்கும் பல மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த ஆண்டு வீரபாண்டி திருவிழா தேனி மாவட்டத்தின் வரலாற்றில் இல்லாத அளவு கூட்டத்தை கூட்டி விட்டது என போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி வரை விழா தொடர்கிறது. அதன் பின்னர் கூட்டம் கலைய புதன் கிழமை மதியம் வரை ஆகி விடும். அதன் பின்னரே வழக்கமான சூழ்நிலை திரும்பும் என போலீசார் தெரிவித்தனர்.