வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா: இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-04-24 16:20 GMT

தேனியில் இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ் வழி நடத்தினார். வரும் மே மாதம் நமது இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டமான வருடாந்திர பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தில் மதம் மாறிய இந்து பட்டியலின சமூகத்திற்கு ஏற்கனவே அனுபவித்து வந்த அரசு சலுகைகளை மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் அளிக்க வேண்டும் என சட்ட மன்றத்தில் தீர்மானித்து மத்திய அரசை வலியுறுத்தி பட்டியலின சமூகத்திற்கு பெரும் துரோகம் செய்ய நினைக்கும் தி.மு.க. அரசை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான அருள்மிகு வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி, பெண்களுக்கு துணி மாற்றும் அறை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து தர வேண்டும். வீரபாண்டி திருவிழா திடல் சுமார் 5 கி.மீ., சுற்றளவிற்கு இருக்கும். எனவே இவ்வளவு பெரிய பரப்பில் சுகாதாரப்பணிகள் செய்வது சவாலான விஷயம்.

இதற்கு ஏற்ற வகையில் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். கூடுதல் கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும். கூடுதல் குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும். மின் இணைப்பு, சர்க்கஸ் மற்றும் இயந்திர பொழுது போக்கு அமைப்புகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக, மிக தீவிரமாக பின்பற்றி அமைக்க வேண்டும். எந்த சூழலிலும் விபத்து ஏற்படும் வகையில் அசட்டையான போக்கு கடைபிடிக்க அனுமதிக்க கூடாது. கோயிலில் கூட்ட நெரிசல் மிக, மிக அதிகம் இருக்கும்.

இந்த நெரிசலில் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று சாமியை வழிபட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்பினை தீவிரப்படுத்த வேண்டும். சமூக விரோதிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும். திருவிழா திடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News