தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை- வணிகர் சங்க பேரவை
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.;
தேனி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், போதை பாக்கு விற்பனை செய்பவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் செல்வக்குமார் கூறுகையில், தேனி மாவட்ட வணிகர் சங்க பேரவையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் புகையிலை பொருட்கள், போதை பாக்கு உட்பட பொதுமக்களுக்கு கேடு தரும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அப்படி விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் அவர்கள் மீது எடுக்கும் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற வணிகர் சங்க பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்காது. இது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.