24 ஆண்டுக்கு பின் வைகை அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வரத்து
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியை எட்டியது.;
தேனி மாவட்டத்தில், கடந்த 1997ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் பலத்த மழை கொட்டியது. அப்போது மாவட்டத்தில் பலத்த மழை பெய்த நிலையில், போடி, உத்தமபாளையம் பகுதியில் ஏராளமான கண்மாய்கள், ஒரே நேரத்தில் உடைந்தன. அதேசமயம் முல்லை பெரியாறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் வரத்து இருந்தது.
அப்போது, குன்னுார் வைகை ஆற்றுப்பாலம் மூழ்கி, பாலத்திற்கு மேல் 6 அடி உயரம் தண்ணீர் சென்றது. மதுரை ரோடு 3 கி.மீ., துாரம் தண்ணீரில் மூழ்கியது. இந்த வெள்ளம் வரும்போது, கலெக்டர் பஷீர்அகமதுவும், எஸ்.பி., ராஜேஷ்தாஷூம் வைகை அணையில் இருந்தனர். நீர் வரத்து அதிகமாவதை தொடர்ந்து அணையில் இருந்து விநாடிக்கு 90 ஆயிரம கனஅடி நீரை திறந்து விட்டனர். அப்போது வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மதுரை செல்லுாரில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
அதன் பின்னர், இந்த ஆண்டுதான் (24 ஆண்டுகள் கழித்து) பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று தேனி வீரபாண்டியில் 52 மி.மீ., வைகை அணையில் 24 மி.மீ., சோத்துப்பாறையில் 25 மி.மீ., பெரியகுளத்தில் 31 மி.மீ., போடியில் 24.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 23.2 மி.மீ., ஆண்டிபட்டியில் 28 மி.மீ., மழை பதிவானது. மேகமலை வனப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால், நேற்று இரவு 9.30 மணியளவில் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியை எட்டியது. நீர் மட்டமும் 70 அடியை கடந்ததால், வந்த நீர் முழுக்க வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு முழுவதும் இதே அளவு நீர்வரத்து இருந்தது. இன்று காலையில் இருந்து படிப்படியாக குறைந்து, காலையில் விநாடிக்கு 7500 கனஅடியாக குறைந்தது. பிற்பகலில் 5 ஆயிரம் கனஅடிக்கும் கீழ் குறைந்தது. இன்னும் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதால் மிகுந்த கண்காணிப்பு மற்றும் விழிப்புடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.