தேனி, போடி, பெரியகுளம் நகராட்சிகளை குறி வைக்கிறது அ.தி.மு.க

தேனி மாவட்டத்தில் எப்படியும் மூன்று நகராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் அ.தி.மு.க., தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Update: 2022-01-28 11:15 GMT

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளை அ.தி.மு.க., இழந்தது. போடியிலேயே இழுபறிக்கு பின்னர் ஓ.பி.எஸ்., வெற்றி பெற்றார். அதனால் அ.தி.மு.க., தனது கோட்டையை இழந்தது என கடும் விமர்சனம் எழுந்தது. ஓ. பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது, 'சொந்த ஊரிலேயே ஜெயிக்க முடியல, எதிர்க்கட்சி தலைவராகி என்ன செய்ய போகிறார்' என கடும் விமர்சனம் எழுந்தது.


இதனை மனதில் வைத்தே தற்போது ஓ.பி.எஸ். பம்பரமாக சுழன்று வருகிறார். தேனி மாவட்ட தலைநகரான தேனி, தனது சொந்த ஊரான பெரியகுளம், சொந்த தொகுதியான போடி ஆகிய மூன்று நகராட்சிகளை கைப்பற்றியே ஆக வேண்டும். அதற்கு ஏற்ப கவுன்சிலர் வேட்பாளர் தேர்வில் ஓ.பி.எஸ்., கடுமையாக கவனம் செலுத்தி வருகிறார். ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகனும் தேனி தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத், மாவட்ட செயலாளர் சையதுகான உள்ளிட்ட அ.தி.மு.க., தலைவர்கள் கவுன்சிலர் வேட்பாளர் தேர்விலேயே மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதற்காக சின்னமனுார், கம்பம், கூடலுாரை எளிதில் விட்டுக்கொடுத்து விடுவோம் என்பது அர்த்தமல்ல. எங்களின் இலக்கு ஆறு நகராட்சிகளையும் கைப்பற்றி இழந்த கோட்டையை மீட்பது தான் என அ.தி.மு.க.,வினர் சூளுரைத்து செயல்பட்டு வருகின்றனர். இதனை நன்கு புரிந்து கொண்ட தி.மு.க., ஆறு நகராட்சிகளிலும் அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறது. எனவே இரண்டு கட்சிகளும் இதுவரை நீ தான் வேட்பாளர் என யாருக்கும் எந்த உத்தரவாதமும் தராமல் பட்டியலில் ரகசியம் காத்து வருகின்றனர்.

Tags:    

Similar News