கம்பம், கூடலுார் பகுதியில் சட்டம் ஒழுங்கில் நிலவும் அசாதாரண சூழல்: போலீஸார் திணறல்

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலுாரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் போலீஸாருக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது

Update: 2022-01-30 08:00 GMT

கம்பம், கூடலுாரில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழல் தேனி மாவட்ட  காவல்துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி  வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ்.  நிர்வாகி  தாக்கப்பட்டார். இவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு பா.ஜ.க, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்புகள்  போராட்டம் நடத்தின . இது தொடர்பாக  இரண்டு பேரை கைது செய்த போலீஸார் அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்  சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவர் போலீஸ்  விசாரணை வளையத்திற்குள் உள்ளனர்.

இந்ந நிலையில், போலீஸ் நடவடிக்கையால் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.வினர் அமைதி காக்க தொடங்கி உள்ளனர். ஆனால் முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேனி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்று இரவு யாரோ சிலர் கூடலுாரில் முக்கிய வீதிகளில் பல இடங்களில் தேசிய தலைவர்களை பற்றி மிகவும்  கேவலமான  வார்த்தைகளை தார்ச்சாலையில்  எழுதி வைத்து விட்டனர். நள்ளிரவே இதனை கண்டு பிடித்த போலீஸார் காலை 4 மணிக்குள் அனைத்தையும் அழித்து விட்டனர். விடிந்ததும் அந்த வாசகங்களை மக்கள் பார்த்திருந்தால் கூடலுாரில் சமூக அமைதி  கெட்டுப் போய் இருக்கும்.

இதை எழுதியவர்கள் யார் என்பதை போலீஸார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் இதுவரை இல்லாத அளவுக்கு போலீஸ் நிர்வாகத்தை உலுக்கி விட்டது. முக்கிய சாலைகளில்  தலைவர்களை கேவலமாக விமர்சித்து எழுதுவது, சந்தித்திராத  புது பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால் இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடிப்பிடிப்பதில் போலீஸ் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கம்பம், கூடலுாரில் பிரச்னையின்றி தேர்தல் நடத்தி விட முடியுமா? அதற்கு என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம்  தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Tags:    

Similar News