இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது.. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு...

இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.;

Update: 2023-01-16 04:37 GMT

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். (கோப்பு படம்).

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 53 ஆவது ஆண்டு விழாவில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

எல்லைப் பிரச்னைகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று காட்டியது. இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்தியாவின் நீண்டகால பொறுமையான அணுகுமுறை பயங்கரவாதத்தை இயல்பாக்குவதற்கான ஆபத்தை உருவாக்கியது. ஆனால், விமானப்படை நடத்திய பதான்கோட் வான்வழித் தாக்குதல் மிகவும் தேவையான செய்தியை உலகிற்கு அனுப்பியது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு பதான்கோட் பயங்கரவாத முகாம் மீது வான்வழித் தாக்குதலின் போது இந்தியா முதன்முறையாக விமானப் படையைப் பயன்படுத்தியது. வடக்கு எல்லைகளில், பெரிய படைகளைக் கொண்டு வந்து, நமது ஒப்பந்தங்களை மீறியதன் மூலம், தற்போது உள்ள நிலையை மாற்ற சீனா இன்று முயன்று வருகிறது.

கொரோனா பரவல் இருந்த போதிலும், இந்த சம்பவம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது நம்முடைய எதிர் பதிலடி வலுவாகவும் உறுதியாகவும் இருந்தது. எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்கள் தீவிரமான நிலப்பகுதிகளிலும் மோசமான வானிலையிலும் எல்லைகளை பாதுகாத்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்கள் மிக தீவிரமான நிலப்பரப்பு மற்றும் கடுமையான வானிலையில் நமது எல்லைகளை பாதுகாக்கின்றனர். அது இன்று வரை தொடர்கிறது. எனவே, இந்தியா விவகாரம் உலக அளவில் முக்கியமானது. இந்தியா அச்சுறுத்த முடியாத ஒரு நாடு என்று உலகம் பார்க்கிறது. இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது. இந்தியா அதன் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானதை செய்யும்.

கவனமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மூலம் முழு அளவிலான தொடர்புகள் மற்றும் வலுவான பொருளாதார இணைப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த 1947 ஆம் ஆண்டில் பிரிவினை நடைபெறாமல் இருந்திருந்தால், இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக இருந்திருக்கும். சீனா அல்ல. பிரிவினை பல பிராந்தியங்களை துண்டித்து நாட்டின் அந்தஸ்தைக் குறைத்து உள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

Tags:    

Similar News