தேனியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையிழப்பு!
தேனி மாவட்டத்தில் பருத்தி ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் மூடப்பட்டு வருவதால் வேலையிழப்பும் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது 3 ஆயிரம் ஏக்கருக்கும் குறைந்த பரப்பில் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது. தேனியில் இயங்கி வந்த தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய பருத்தி மார்க்கெட் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டது.
இதன் விளைவு பருத்தியை மூலப்பொருளாக கொண்டு இயங்கி வந்த ஜின்னிங் மில்கள் மூடப்பட்டன. பருத்தி ஆயில் மில்களும் மூடப்பட்டன. சில ஆண்டுகளாக ஸ்பின்னிங் மில்களும் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. தற்போதய நிலையில் தேனியில் மிகப்பெரிய அளவில் செயல்படும் ஓரிரு ஸ்பின்னிங் மில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த மில்களுக்கும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தே பருத்தி வந்து கொண்டுள்ளது.
உள்மாவட்டத்தில் பருத்தி விளைச்சல் வீழ்ச்சி அடைந்ததே ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் மூடப்பட்டதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் மூடப்பட்டதால் தேனி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. தேனி, ஆண்டிபட்டி மற்றும் சுற்றுக்கிராமங்களில் வசிப்பவர்கள் தான் இதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.