ஏ.டி.எம்., கார்டுகளை எந்திரத்தில் விட்டுச் செல்லும் அப்பாவி மக்கள்..!
தேனியில் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் பொதுமக்கள் பணத்தை எடுத்ததும் அவசரத்தில் கார்டினை எந்திரத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.
ஏடிஎம் கார்டுகளை பணம் எடுக்கும் இயந்திரத்திலேயே விட்டுச் செல்லும் ஏ.டி.எம் கார்டுகளை எடுத்து பாதுகாக்கும் ஏ.டி.எம்., மைய காவலர்கள், அவர்கள் மீண்டும் திரும்ப வரும் போது அந்த கார்டினை ஒப்படைக்கின்றனர்.
ஏ.டி.எம்.,களில் பழைய முறைப்படி கார்டினை சொருகி எடுத்ததும் இதர விவரங்களை எந்திரம் கேட்கும். அதனை பதிவு செய்ததும் பணம் வரும். தற்பாது சிப் வைத்த கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்டுகள் பணத்தை எடுத்த பின்னரே வெளியே வரும்.
அதுவரை வெளியே எடுக்க முடியாது. சில அப்பாவி பொதுமக்கள் இந்த விவரம் அறிந்திருந்தாலும், அவசரத்தில் பணத்தை எடுத்ததும் கார்டுகளை எந்திரத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இதனை பார்க்கும் பொதுமக்கள் அந்த கார்டினை எடுத்து ஏ.டி.எம்., மைய பொறுப்பாளர்களிடம் தருகின்றனர்.அவர்கள் பத்திரப்படுத்தி, அந்த நபர் காட்டினை காணவில்லை என ஓடி வரும் போது கார்டினை கொடுக்கின்றனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:
சில ஏ.டி.எம்.,களில் பதிவுப் பணிகள் நிறைவடைந்ததும் கார்டினை எடுத்த பின்னரே பணம் வரும் வகையில் அமைத்துள்ளனர். இது போன்ற ஏ.டி.எம்.,களில் பிரச்னை வருவதில்லை. ஆனால் பல ஏடிஎம்களில் கார்டினை பணம் வெளிவந்த பின்னரே எடுக்க முடியும். பணத்தை எடுத்ததும் அவசரத்தில் பலர் கார்டினை விட்டுச் செல்கின்றனர். இவற்றை பத்திரப்படுத்தி அவர்களிடம் ஒப்படைப்பது பெரும் சிக்கலான விஷயமாக உள்ளது. எனவே அனைத்து ஏ.டி.எம்.,களிலும் கார்டினை எடுத்த பின்னரே பணம் வரும் வகையில் செட்டிங்ஸ்களை மாற்றி அமைக்க உள்ளோம் என்றனர்.