ஆட்டோ கட்டணம் தர முடியாமல் பரிதவிக்கும் தேனி பொதுமக்கள்
அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டியில் வசிக்கும் மக்கள் புது பஸ்ஸ்டாண்ட் செல்ல ஆட்டோ கட்டணம் ரூ 120வழங்க வேண்டி உள்ளது;
தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் நகர் பகுதிக்கு வெளியே மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ்க்கு செல்லும் வழியில் ஏழு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டது முதல் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர் வழியாக பெரியகுளம், திண்டுக்கல், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்லும் அத்தனை பஸ்களும் பைபாஸ் ரோடு வழியாக சென்று விடுகிறது. இதனால் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி மக்கள் நகர் பகுதிக்கு வெளியே அன்னஞ்சி விலக்கில் சென்று பஸ் ஏற வேண்டும். பஸ்ஸ்டாண்டிலேயே பஸ்சீட்டுகள் நிறைந்து விடுவதால், அன்னஞ்சி விலக்கில் பஸ் ஏறினால் நின்று கொண்டு பயணிக்க வேண்டும். தவிர அல்லிநகரத்தில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்வதற்கே ஆட்டோ கட்டணம் அதிகளவில் தர வேண்டும்.
இதே பிரச்னை அரவிந்த் கண் மருத்துவமனை குடியிருப்பு, சிவராம்நகர், தீயணைப்புத்துறை ஓடைத்தெரு மக்களுக்கும் உள்ளது. இவர்கள் புதிய பஸ்ஸ்டாண்ட் செல்ல ஆட்டோவிற்கு 120 ரூபாய் கட்டணம் கொடுக்க வேண்டி உள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட நாயுடு உறவின்முறை சங்க தலைவர் ராஜாராம் கூறியதாவது: பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், தீயணைப்புத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், சிவராம்நகர், சமதர்மபுரம், கே.ஆர்.ஆர்.,நகர், சிவாஜிநகர் வழியாக புதிய பஸ்ஸ்டாண்டிற்கு டவுன் பஸ் விட வேண்டும்.
இல்லையென்றால் மினிபஸ் விட வேண்டும். பஸ்கள் சென்று வர வசதியாக ரோடுகளும் நல்ல முறையில் உள்ளன. இப்படி பஸ் வசதி கேட்டு, நாங்கள் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். எங்களால் 3.5 கி.மீ., துாரம் உள்ள பஸ்ஸ்டாண்ட் செல்ல 120 ரூபாய் ஆட்டோ கட்டணமாக வழங்க முடியாது. இப்பகுதியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களின் நலன் கருதி முதல்வர் பஸ் விடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு கூறினார்.