ஓ.பி.எஸ்- ரவீந்திரநாத்துக்கு சவாலாக தேனியில் பலத்தைக் காட்டிய உதயகுமார்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தேனியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2022-07-26 12:30 GMT

தேனியில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள்.

திமுகவின் மக்கள் விரோதப்போக்கைக்கண்டித்து  தேனியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் பேசியதாவது: ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே நடத்தியது தர்மயுத்தம். தற்போது நடத்துவது துரோக யுத்தம். ஆயிரக் கணக்கான தொண்டர்கள் இன்று எங்களது அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கிறார்கள்.தேனி மாவட்டத்தில் கூட்டம் நடத்த முடியுமா? என்று குரல் கொடுத்து பார்த்தார்கள் உள்ளே வர முடியுமா?என்று கேள்வி கேட்டார்கள். நம்பினோர் கெடுவதில்லை என்கின்ற வாக்குக்கிணங்க எடப்பாடியாரை நம்பி இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடி இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி ஒளிந்து கொள்வார். அவருக்கு பதவி பறிபோகிறது என்றால் தர்மயுத்தம் நடத்துவார். அவரின் துரோகத்தை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு விட்டார்கள்.இங்கே இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு தெரியும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு யார் பாடுபட்டது என்று. அவருக்கு தைரியம் இருந்தால் நாளையே அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். அப்படி நடந்தால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகத் தயார்.

மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஒரு ஆட்சி நடக்கிறது என்று ரவீந்திரநாத் கூறியது எந்த வகை நியாயம். திமுக என்னும் தீய சக்தியை ஒழிக்க அதிமுக இருக்கும் போது இவர் ஸ்டாலினை சந்தித்திருக்கலாமா?அதிமுகவில் இனி ஓ.பன்னீர்செல்லத்திற்குவேலை இல்லை தேனியிலும் வேலை இல்லை சென்னையில் இனி அவருக்கு வேலை இல்லை.நிச்சயம் பன்னீர்செல்வம் தேனியை காலி செய்து சென்று விடுவார். தமிழக மக்களை விட்டு பன்னீர்செல்வம் சென்றால் சரி.

தேனி மாவட்டத்தில் இருந்து தான் அதிகப்படியான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களை நீக்கிவரும் பன்னீர்செல்வம் ஒரு கோடியே 99 லட்சம் தொண்டர்களையும் நீக்கி விட்டோம். நானும் என்னுடன் இருக்கும் நான்கு பேர் மட்டும் கட்சியில் தொடர்கிறோம் என ஒரு நாள் கூறுவார். அதிமுக கழக அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் குண்டர்கள் காலால் எட்டி உதைத்த சம்பவத்தை ஒருபோதும் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் வணங்குகிற கோவிலை செருப்பு காலால் எட்டி உதைத்த பாவத்தை செய்த நீங்கள் எத்தனை கங்கையில் குளித்தாலும் உங்கள் பாவம் தீராது.10 வருட காலம் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய எனக்குத் தெரிந்து இவ்வளவு விரைவாக சீல் வைக்கப்பட்டது தலைமை அலுவலகம் தான். சட்டத்தின் வழியாக தற்போது தலைமைச் செயலகம் மீண்டும் திறக்கப்பட்ட போது தான் தெரிந்தது ஏராளமான நினைவுச் சின்னங்களும் பரிசு பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி அத்தனை பொறுப்புகளையும் கொடுத்து இன்று அதிமுகவினர் ஏமாந்து நிற்கின்றனர்.ஓ பன்னீர்செல்வத்தை நம்பி நீங்கள் சேர்த்துக் கொண்டால் அறிவாலயத்திலும் அந்த கொள்ளைக் கும்பல் வந்து கொள்ளையடிக்கும், எடப்பாடிக்கு இருக்கிற செல்வாக்கை பார்த்து ஓ. பன்னீர்செல்வத்தால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. தேனி மாவட்டத்திற்காக அவர் என்ன செய்தார்? தன் சுயநலத்திற்காக மட்டும் தான் பாடுபட்டு இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் 100% வெற்றி அதிமுகவிற்கு.மூன்று முறை முதலமைச்சராக இருந்த போதும் தேனி மாவட்டத்தில் ஒரு பாலம் கூட கட்டவில்லை . ஆனால் அவர் மட்டும் வீடு மேல் வீடு காடு மேல் காடு, தீவு மேல் வாங்கி...அதற்கு மேல் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்யவில்லை. தன்னுடைய போடி தொகுதியை மட்டும் தான் சுற்றி வந்த நீங்கள் தலைவரா?ஆனால் மீண்டும் அதிமுகவின் அரசு அமைய வேண்டும் என்று சூறாவளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. பக்கத்து மாவட்டத்தில் கூட பிரசாரம் செய்யாத ஓ பன்னீர்செல்வம் தலைவரா?ஒருங்கிணைப்பாளரா?

துரோகம் ஒரு நாளும் வென்றதில்லை.தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு வெற்றி மாநாடை போல உள்ளது.வெகு விரைவில் துரோகம் வீழ்த்தப்படும் தர்மம் வெல்லும்,சொத்துவரியை 150 சதவீதமும், மின் கட்டணத்தை 39 சதவீதமும் உயர்த்தியுள்ளார்கள். மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்கின்ற நிலை மாறி மின்சார பில்லை பார்த்தாலே சாக்கடிக்கும் நிலை தற்போது உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை. இலங்கையிலே எழுந்த மக்கள் எழுச்சியை போல தற்போது கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அம்மாவின் அரசு மூன்று முறை 142 அடியாக உயர்த்திக் காட்டியது ஆனால் கையாலாகாத திமுக அரசால் 142 அடியாக உயர்த்த முடியவில்லை.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் என்றால்,அதிமுக அதனை வேரறுத்து ஐந்து மாவட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும்.இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News