இரவில் நடக்கும் டூ வீலர் ரேஸ்: பயத்தில் பரிதவிக்கும் தேனி மக்கள்
தேனியில் டூ வீலர் ரேஸ் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் காவல்துறை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனியில் மதுரை ரோட்டில் இருந்து பாரஸ்ட்ரோடு வழியாக என்.ஆர்.டி., நகர், பழைய பத்திர அலுவலக ரோடு, சமதர்மபுரம், பழைய அரசு மருத்துவமனை வழியாக காந்திநகரையும், குறிஞ்சிநகர், வெங்கலாகோயில் பகுதியையும் இணைக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நல்ல முறையில் தார்ரோடு அமைத்து கொடுத்துள்ளது.
இந்த தார்ரோட்டில் இப்பகுதி இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே அதிக வேகமாக டூ வீலர் ஓட்டிச் செல்கின்றனர். ஒரு டூ வீலரில் மூன்று முதல் நான்கு பேர் அமர்ந்து கொள்கின்றனர். ஒரே நேரத்தில் நான்கு முதல் ஐந்து டூ வீலர்களில் இவர்கள் வலம் வருகின்றனர். மிக அதிக சத்தத்துடனும், அதிக வேகத்துடனும் டூ வீலரை இயக்குகின்றனர்.
இரவில் இப்பகுதியில் தெருவிளக்குகளும் கிடையாது. இப்பகுதியில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த டூ வீலர் ரோமியோக்கள் அதிக வேகமாக வரும் போது, குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் சிக்கினால் அவர்கள் உயிரிழப்பதை தவிர வேறு வழியில்லை.
இப்பகுதியில் சமதர்மபுரம் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இரவு வரை நீண்ட நேரம் பஜார் போல் மக்கள் நடமாட்டம் உள்ளது. தவிர குறிஞ்சி நகர் வெங்கலாமுனீஸ்வரர் கோயிலுக்கு பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்த ரேஸ் காரணமாக இந்த மக்கள் தினமும் அச்சத்துடன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த இளைஞர் கும்பல் நடத்திய டூ வீலர் ரேஸில் ஒரு நாய் சிக்கி உயிரிழந்தது. நாயை போல் வேறு பொதுமக்கள் சிக்கினாலும் அதே இடத்தில் உயிரிழப்பு ஏற்படும்.
காவல்துறையினர் பெரும்பாலும் இப்பகுதிக்கு வருவதில்லை. குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு வரை இப்பகுதியில் தினமும் குறைந்தபட்சம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர் குழுவினர் ரோந்து வந்தால் இந்த கும்பலின் அட்டகாசம் கட்டுக்குள் வரும்.
இதற்கு தேனி மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர். மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து பார்த்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி .உள்ளனர்.