சாலையோரம் உள்ள மெக்கானிக் கடைகளால் கம்பம், மதுரை, பெரியகுளம் சாலையில் விபத்து அபாயம்
தேனி, கம்பம், பெரியகுளம் சாலையோரங்களில் உள்ள டூ வீலர், கார் மெக்கானிக் கடைகளால் விபத்து அபாயம் உருவாகியுள்ளது.;
தேனி, கம்பம், பெரியகுளம் சாலையோரங்களில் ஏராளமான மெக்கானிக் கடைகள் உள்ளன. தவிர டூ வீலர், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தங்கள் கடைக்கு பாரமரிப்பிற்கு வரும் வாகனங்களையும், வாங்கி, விற்க வைத்திருக்கும் வாகனங்களையும் சாலையோரம் நிறுத்தி வைக்கின்றனர். ஏற்கெனவே நகரில் ஆக்கிரமிப்பால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகனங்களும் நின்று கொள்வதால் பெரும் பிரச்னை உருவாகிறது. தவிர சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களை சாலையின் மையப்பகுதிக்கு மாற்றச் சொல்லி நகராட்சி நிர்வாகம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறது.
மின்கம்பங்களின் பாதுகாப்பில் சாலையோரம் ஆக்கிரமித்து கை வைத்துக் கொள்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல சாலையில் இடமில்லை. சில மாதம் முன்பு கூட இந்த பிரச்னையால் தான், ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார். அதன் பிறகு விபத்துக்கு காரணங்களை கண்டறிந்த போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியதோடு நின்று விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன்வரவில்லை. வீணாக உயிப்பலி மட்டும் ஏற்பட்டு வருகிறது.
தேனியில் நல்ல விரிவான ரோடு இருந்தும் அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக பெரும் நெரிசலும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட போக்குவரத்திற்கு தலைமை அதிகாரி என்ற வகையில் கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.