பயிர்களுக்கு மருந்து தெளிக்கும்போது 2 விவசாயிகள் உயிரிழப்பு..! கூடலூரில் சோகம்..!
பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் போது பாதிப்பு ஏற்பட்டு கூடலுாரில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.;
தேனி மாவட்டம், கூடலூர் முல்லைப் பெரியாறின் தலைமடையில் இருக்கும் முக்கியமான ஒரு ஊர். ஊரைச்சுற்றி நிரவிக் கிடக்கும் செழுமையே அதற்குச் சான்றாகும். நெல் திராட்சை முக்கிய பயிராக இருந்தாலும் கூடலூரின் மேற்குப் பகுதியில் மானாவாரி விவசாயமும் நடைபெற்று வருகிறது.
காலங்காலமாக விவசாயம் செய்து வரும் அந்த அப்பாவிகளின் வாழ்க்கையில் கடந்த இரு மாதங்களாக சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது. வயலுக்கு வழக்கமாக மருந்து தெளிக்கச் சென்ற இருவர், ஒரு வார கால இடைவெளியில் மரணம் அடைந்திருக்கிறார்கள்.
வயலுக்கு மருந்து அடிக்கச் சென்றால் மரணம் வந்துவிடுமா என்கிற கேள்வியோடு அந்த விவசாயிகள் விக்கித்து நிற்கிறார்கள். கூடலூரைச் சேர்ந்த விவசாயி குணசேகரன் அங்குள்ள ஒரு மருந்து கடையில் வாங்கிய மருந்தை வயலுக்கு தெளித்த போது, உடம்பெல்லாம் புண் ஏற்பட்டு கடந்த 27ஆம் தேதி கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அதற்கு மறுநாள் அதாவது 28 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்.
அதற்கு மறுநாள் அதாவது 26-9- 23 அன்று, கூடலுார் விவசாயி பாண்டியன் விவசாய பயிருக்கு மருந்து தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பால் கம்பம் அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இ.சலேத்து, பொன்.காட்சிக்கண்ணன், தேவாரம் மகேந்திரன், பா.ராதாகணேசன், அன்வர்பாலசிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது: அப்பாவி விவசாயிகளான குணசேகரனும், பாண்டியனும் அமெரிக்காவிலிருந்து மருந்து வாங்கி வந்து தெளிக்கவில்லை. உள்ளூரில் வழக்கமாக வாங்கும் கடையில் வாங்கித்தான் மருந்து தெளித்து இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் மேற்கண்ட விவசாயிகளுக்கு நேராத பேரவலம் இப்போது நேர்ந்திருக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட மருந்து கடை உரிமையாளர் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா, அவரிடம் இருந்த மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனவா என்பதை குறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
எங்களுக்கு நினைவு தெரிந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை வயலுக்கு தெளிக்கும்போது சில நேரங்களில் உடம்பில் படத்தான் செய்யும். ஆனால் அது புண்ணாக ஒருபோதும் மாறியதாக தெரியவில்லை. ஆனால் அப்பாவி விவசாயியான குணசேகரனுக்கு புண் ஏற்பட்டது எப்படி என்பதை குறித்த மருத்துவ அறிக்கையை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தெளிவு படுத்தியதா என்றும் தெரிய வேண்டும்.
இன்றைக்கு மரணமடைந்திருக்கும் அப்பாவி விவசாயியான. பாண்டியன் 62 வயதுக்கு சொந்தக்காரர். மறைந்த விவசாயி குணசேகரன் வயது 42 மட்டுமே. இக்கட்டான நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மரணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்னவென்று தெரிய வேண்டும்.
குறிப்பிட்ட அந்த உர விற்பனை நிலையம் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து விவசாயிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இருவர் மரணத்திலும் மருத்துவமனை கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட உரக்கடை முதலாளி வழக்கமாக வாங்கும் மருந்து கம்பெனிகளில் மருந்தை வாங்கினாரா அல்லது குறைந்த விலைக்கு தரமற்ற முறையில் கிடைக்கும் மருந்தை வாங்கி விவசாயிகளை ஏமாற்றினாரா என்பது குறித்து காவல்துறை முறையாக விசாரிக்க வேண்டும். தரச்சான்று இல்லாத மருந்துகள் விற்கப்பட்டதா என்பதை வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மருந்து வாங்கும் விவசாயிகளுக்கு முறையான பில் கொடுக்கப்படுகிறதா என்பதை தேனி மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
விவசாயம் செழித்த மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இரண்டு விவசாயிகளின் அகால மரணம் இனிமேல் வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்கலாமா வேண்டாமா என்கிற கேள்விகளை எழுப்பி இருக்கிறது. வேளாண்மை துறை அமைச்சர், தமிழக முதல்வர், நடந்த இந்த சோகத்திற்கு முறையான நிவாரணம் வழங்குவதற்கு முன் வர வேண்டும்.
சாராயம் குடித்து மரணித்தவருக்கு தாயுள்ளத்தோடு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வர் வயலுக்கு மருந்து தெளிக்கும் போது ஏற்பட்ட சுவாசக் கோளாறாலும், உடம்பில் ஏற்பட்ட புண்ணாலும் மரணித்து போன எங்கள் அப்பாவி விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதோடு, சம்பந்தப்பட்டவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லை வழக்கம் போல் நாங்கள் போராடிய பிறகு தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றால் இரண்டொரு நாட்களில் கூடலூரில் போராட்டத்தை நடத்துவதற்கும் அணியமாவோம்.
இதே பிரச்சனையில் சிக்கி வேறு எந்த விவசாயியும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதையும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். மரணித்த இருவருக்கும் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.