முப்படை தலைமைத்தளபதி வீர மரணம்: சோகத்தில் மூழ்கிய தேனி மாவட்டம்
இந்தியாவின் முப்படை தலைமைத்தளபதி பிபின்ராவத் வீரமரணம் அடைந்ததற்கு, தேனி மாவட்ட பொதுமக்கள் பெருமளவில் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் விபத்தில் பலியானதால் நாடே சோகத்தில் மூழ்கியது. இதற்கு தேனி மாவட்டமும் விதிவிலக்கல்ல. .
பிபின் ராவத்தின் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், கூடலுாரில் விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து நேற்று இரவே அஞ்சலி கூட்டம் நடத்தினர். அடுத்தடுத்து மாவட்டம் முழுவதும் பிபின்ராவத் பிளக்ஸ்கள், பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.
பல்வேறு வர்த்தக நிறுவனங்களும், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி பிளக்ஸ்களை அடித்து மாட்டியிருந்தனர். மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், வீர மரணமடைந்த இந்திய தலைமை தளபதிக்கு அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன. விவசாய சங்கங்கள், மகளிர் குழுக்கள், பல்வேறு சமூக அமைப்புகள் என அத்தனை பேரும் அஞ்சலி செலுத்தினர்.