கேரளாவை கண்டு நடுங்குகின்றனர்? என்ன ஆச்சு தமிழக அதிகாரிகளுக்கு

தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளை கண்டு நடுங்குவதாக தமிழக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Update: 2022-03-29 03:32 GMT

தேனி மாவட்டத்தில் தமிழகத்திற்கு சொந்தமான வனப்பகுதிக்குள், கண்ணகி கோயில் உள்ளது. இதற்கு செல்லும் பாதை கேரளா வழியாக உள்ளது. இதனால் இரு மாநில அதிகாரிகளும் பேசி சித்திரை பவுர்ணமி தினத்தன்று விழா நடத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் விழா நடக்கவில்லை. தற்போது விழா நடக்க உள்ளது. இதனால் கண்ணகி கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் இணைந்த குழுவினர் கண்ணகி கோயில் சென்றனர். அங்கு கேரள அதிகாரிகளும் சிலர் வந்திருந்தனர்.

இரு மாநில அதிகாரிகளும், சம அளவிலான படிப்பு, சம அளவிலான பதவி, சம அளவிலான அதிகாரம் கொண்டவர்கள். சம அளவிலான தகுதியும், சம்பளமும் வாங்குபவர்கள். ஆனால் கேரள அதிகாரிகளின் ஆளுமையோடு ஒப்பிடுகையில், தமிழக அதிகாரிகள், பண்ணையாரிடம் பணியும் வேலையாட்கள் நடந்து கொண்டதாக பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் கடுமையாக விமர்சனம் வைக்கின்றனர். இதேபோல் ஒவ்வொரு முறையும் முல்லை பெரியாறு அணைக்கு செல்லும் போதெல்லாம், கேரள அதிகாரிகள் ஏதோ ராணுவ உயர்நிலை அதிகாரிகள் போன்றும், தமிழக அதிகாரிகள் அவர்களிடம் சிக்கிய அடிமைகள் போன்றும் நடந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தமிழக பொதுப்பணித்துறை, மின்துறை அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால், சசிக்க முடியவில்லை. அந்த அளவு பணிவு காட்டுகின்றனர். தமிழக அதிகாரிகளுக்கு மனதளவில் ஏன் சிறிய அளவில் கூட தைரியம் இல்லை. நிச்சயம் இது தமிழக அரசின் உத்தரவாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி கேரள அதிகாரிகளுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள் என நிச்சயம் தமிழக அரசு நம் அதிகாரிகளுக்கு உத்தரவிட வாய்ப்பே இல்லை. இருப்பினும் தனது அலுவலகத்தில் ஒரு மகாராஜாவை போல் நடந்து கொள்ளும் அதிகாரிகள், கேரள அதிகாரிகளை கண்டதும் பம்முவதன் அர்த்தம் புரியவில்லை என நெருங்கி பழகும் நிருபர்கள் மனம் உடைந்து பேசுகின்றனர். ஆனால் தமிழக நிருபர்கள் எந்த சூழலிலும் கேரள அதிகாரிகளின் அத்துமீறலை தட்டிக்கேட்காமல் இருந்ததும் இல்லை. அவர்கள் முன் செய்து வேண்டும் என்பதற்காக தன் நிலையை விட்டுக்கொடுத்து நடந்து கொண்டதும் இல்லை. தமிழக பத்திரிக்கையாளர்களை கேரள அதிகாரிகள் தொந்திரவு செய்தால், கேரள பத்திரிக்கையாளர்கள் தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக களம் இறங்குகின்றனர். இப்படி தமிழக, கேரள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மிச்சிறந்த நட்பும், செய்திகளை பகிர்தலும், ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்போக்கும் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

தமிழக அதிகாரிகளே... நீங்களும் உயர் படிப்பு படித்தவர்கள் தான்... இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அத்தனை பேருக்கும் ஒரே அதிகாரம் தான் வழங்கி உள்ளது. நிச்சயம் கேரள அதிகாரிகள் ஒன்றும் தமிழக அதிகாரிகளுக்கு 'பிக்பாஸ்' கிடையாது. புரிந்து நடந்து கொள்ளுங்கள் என பல நிருபர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். நிருபர்களின் கருத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News