Theni news today-மாணவிகளை பாதுகாக்கும் தேனி காவல்துறை..!
பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பதற்கு தேனி காவல்துறை மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
தேனி ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாக்க போலீசார் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
தேனியில் பெரியகுளம் ரோட்டிலும், மதுரை ரோட்டிலும் ஆறு பள்ளிகள் அமைந்துள்ளன. நகரின் உள் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு செல்பவர்களும் மெயின் ரோட்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தினமும் காலை, மாலை நேரங்களில், அதாவது பள்ளி காலையில் தொடங்கும் நேரத்திலும், மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் இந்த ரோடுகளில் வழக்கத்தை விட போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இதனால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் பள்ளியின் முன்பு நின்று போக்குவரத்தை நிறுத்தி, மாணவ, மாணவிகள் ரோட்டை கடந்து செல்ல உதவி செய்கின்றனர். குறிப்பாக பி.சி., கான்வென்ட் அருகில் போலீசார் உதவி இல்லாமல் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் நுழையவே முடியாது. அந்த அளவு நெரிசல் இருக்கும். எனவே இங்கு கட்டாயம் குறிப்பிட்ட நேரங்களில் போலீசார் நிற்பார்கள்.
தேனியில் பெரியகுளம், மதுரை ரோடுகளில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, மதுரை ரோட்டில் பணிகள் இப்போது தான் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெறும் வரை போலீசாருக்கும் டென்சன் கலந்த தலைவலி தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாகவே தமிழகம் முழுவதும் நகரங்களில் இதைப்போன்ற போக்குவரத்து பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனப்பெருக்கம் இதற்கு முக்கிய காரணம் என்றாலும் நகரங்களில் சாலைகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் விரிவாக்க அல்லது அகலப்படுத்த முடியாது.
ஒன்று மேம்பாலங்கள் அமைக்கப்படவேண்டும் அல்லது ரிங் ரோடு எனப்படும் முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.ரிங் ரோடு அமைப்பதற்கும் சாத்தியமான இடங்கள் இருந்தால் மட்டுமே அதையும் அமைக்கமுடியும். இந்தியாவில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த இன்னும் பல முன்னெடுப்புகள் செய்யப்படவேண்டும்.