தேனியில் மீண்டும் 200 ரூபாயை தொட்ட தக்காளி விலை
தேனி சில்லரை மார்க்கெட்டில் மீண்டும் தக்காளி விலை கிலோ 200 ரூபாயினை தொட்டுள்ளது.
யார் என்ன பேசினாலும், எவ்வாறு விமர்சனம் செய்தாலும், ஆறுதல் அடைய முடியாத ஒரு இக்கட்டான நிலையில் தான் தக்காளி விலை உள்ளது. அதுவும் தேனியில். தேனி தோட்டக்கலை மாவட்டம் தக்காளி அதிகம் விளையும் மாவட்டமாக உள்ளது. இங்கேயே இந்த நிலை என்றால், பெருநகரங்களில் தக்காளி என்ன விலை கொடுத்தாலும் கிடைக்கவே, கிடைக்காது.
மத்தியிலும், மாநிலத்திலும் கடந்த 75 ஆண்டுகளாக ஆண்ட ஆட்சியாளர்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தி, எந்த ஒரு முக்கியத்துவமும் தரவில்லை. இதற்கான தண்டனையை இப்போது நாம் அனுபவிக்கிறோம்.
ஒட்டுமொத்த உலகிலும் இந்த பிழை நிகழ்ந்துள்ளது என்பதற்கு உலகம் முழுவதும் நிலவும் உணவுத்தட்டுப்பாடு மிகச்சிறந்த உதாரணம். இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை என்பதற்காக, எந்த விலையும் தர முடியுமா? இந்தியாவிலும் தமிழகத்திலும் பல ஏழைக் குடும்ப ஆண்கள், பெண்களின் தினசரி வருவாய் இன்று ஒரு கிலோ தக்காளி விலையை விட குறைவு என்பதை மறந்து விடக்கூடாது.
தேனியில் கடந்த மாதம் சில்லரை மார்க்கெட்டில் கிலோ 200 ரூபாயினை தொட்டது. ஓரிரு நாளில் குறைந்து மீண்டும் கிலோ 100 ரூபாய்க்கு வந்தது. சுமார் ஒரு மாதம் வரை இதே நிலை நீடித்தது. இப்போது மீண்டும் கிலோ 200ரூபாயினை எட்டி உள்ளது. தேனி உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேனி உழவர்சந்தையின் அதிகாரப்பூர்வ விலையே 120 ரூபாய் என்பதை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தேனி உழவர்சந்தையின் பிற விலை நிலவரங்கள்:
கத்தரிக்காய்- 40, கொத்தவரங்காய்- 35, சுரைக்காய்- 15, புடலங்காய்- 26, பாகற்காய்- 32, முருங்கைக்காய்- 30, பூசணிக்காய்- 24, உருட்டு பச்சைமிளகாய்- 68, செடி அவரைக்காய்- 60, உருளைக்கிழங்கு- 30, கருணைக்கிழங்கு- 70, சேப்பங்கிழங்கு- 64, கருவேப்பிலை- 28, கொத்தமல்லி- 22, புதினா- 35, சின்ன வெங்காயம்- 70, பெல்லாரி (பெரிய வெங்காயம்)- 30, இஞ்சி- 240, வெள்ளைப்பூண்டு- 280, பீட்ரூட்- 26, நுால்கோல்- 50, முள்ளங்கி- 22, முருங்கை பீன்ஸ்- 115, பட்டர்பீன்ஸ்- 165, சோயாபீன்ஸ்- 112, முட்டைக்கோஸ்- 30, காரட்- 58, சவ்சவ்- 22, காலிபிளவர்- 35, சேம்பு- 48, மொச்சக்காய்- 48, தட்டாங்காய்- 84, பட்டை அவரைக்காய்- 75, கீரை வகைகள்- 25.