இனி தக்காளி சாதம் சாப்பிடலாம்..! ஆனால் விவசாயிக்கு..?
தக்காளி விலை கிலோ 30 ரூபாய், கிலோ 25 ரூபாய் என குறைந்து விட்டதால், இனி எல்லோரும் தக்காளி சாதம் சாப்பிடலாம்.
தக்காளி விலை குறைந்துவிட்டது. பொதுமக்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் விவசாயிகள் பாடு திண்டாட்டம்தான் என்று விவசாயிகள் புலம்புவது மனதை வருந்தச் செய்கிறது.
தேனி மாவட்ட விவசாயிகள் சிலர் கூறியதாவது: பருவநிலை ஏற்படுத்திய மாற்றம் காரணமாக ஒருபுறம் கனமழை, மறுபுறம் கடும் வறட்சி என நாடு முழுவதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி விளைச்சல் அழிந்தது. எனவே உள்நாட்டு தக்காளி விளைச்சல் குறைந்து, விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ 200 ரூபாய் வரை எட்டியது. அப்போது இந்த விஷயத்தை விமர்சிக்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு அனைத்து தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.
தக்காளி விளையவில்லை. 10000ம் கிலோ விளையும் ஒரு தோட்டத்தில் வெறும் 100 கிலோ தான் விளைந்தது. இதனால் விலை உயர்ந்தும் விளைச்சல் இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அபூர்வமாக ஓரிரு விவசாயிகளே இதில் தப்பினர். ஓரிரு விவசாயிகள் மட்டும் சில லட்சங்கள், கோடிகள் சம்பாதித்தது உண்மை தான்.
சட்டத்துக்கு புறம்பான தொழில் செய்பவர்கள் கூட தினமும் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், வாழ்நாள் முழுவதும் உழைத்து களைத்த விவசாயிகள் சம்பாதித்தால் தான் என்ன? இதற்கு தக்காளி இல்லாமல் என்னென்ன சமையல் செய்யலாம் என சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் நீள்கிறது. சிலர் அப்படிப்பட்ட உணவுகள் சமைப்பது குறித்து குறிப்புகளையும் வழங்கினர்.
‘நான் சொன்னால் பணத்திமிரில் பேசுவதாக நினைப்பீங்க... இன்று எங்கள் வீட்டில் தக்காளி சாதம்’ என்ற மீம்ஸ் வசனங்கள் வெளியாகி விவசாயிகளின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தின. தக்காளி லாரி கவிழ்ந்தது போலவும், தக்காளிப்பெட்டிகள் கடத்தப்பட்டதை போலவும், தக்காளி திருட்டைத் தடுக்க முடியாமல் தவிப்பது போலவும், பதிலாக தக்காளி பண்டமாற்று பொருளாக உருவெடுத்தது போலவும் பல வீடியோக்களும் வெளியாகி அதகளப்படுத்தின.
இப்படி நான்கு மாதங்கள் கொடி கட்டிப்பறந்த தக்காளியின் இன்றைய விலை கிலோ 25 ரூபாய். ஆமாம் முதல் ரக தக்காளியின் விலையே 30 ரூபாய். இரண்டாம் ரக தக்காளியின் விலை 25 ரூபாய். இது காலை 8 மணி நிலவரத்தின் விலை. நேரம் செல்ல... செல்ல... தக்காளி விலை குறைந்து கொண்டே வந்து விடும். மாலை நேரங்களில் விற்பனையை முடிக்க வேண்டும் என கிலோ 20 ரூபாய், 15 ரூபாய் என வந்த விலைக்கு விற்றனர்.
தக்காளி 25 ரூபாய்க்கு விற்கப்பட்டால், விவசாயிகளிடம் கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு தான் வாங்குவார்கள் என்ற உண்மை நிலை யாருக்குத் தெரியும்? உழுது, நிலத்தை பண்படுத்தி, பாத்தி கட்டி, நாற்றுகள் வாங்கி நடவு செய்து, தண்ணீர் விட்டு, உரம் வைத்து, களை வெட்டி, மருந்து வெளித்து, 3 மாதம் வளர்த்த ஒரு விவசாயி கிலோ 8 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் விற்றால் எப்படி கட்டுபடியாகும்? எனவே இனிமேல் தக்காளி விவசாயிகள் மண் சோறு தான் சாப்பிட முடியும். ஆனால் விலை குறைந்ததால் மற்றவர்கள் தாராளமாக தக்காளி சாதம், தக்காளி பிரியாணி என வெளுத்துக் கட்டலாம்.
தக்காளியை ஓரிரு நிமிடங்கள் வாங்கி விற்கும் கமிஷன் கடை வியாபாரிகள் கூட கிலோவிற்கு 10 ரூபாய்க்கும் மேல் லாபம் பார்க்கையில் அதனை விளைவித்த விவசாயிக்கு கிலோ 10 ரூபாய் கொடுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நினைக்க வேண்டும். விவசாயி வாழா விட்டால், நாட்டில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடி விடும்.
சின்ன வெங்காயம் ஏற்றுமதியை தடுக்க அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் உள்நாட்டில் சின்ன வெங்காயம் விலை குறையத்தான் செய்யும். பரவாயில்லை. ஆனால் ரொம்பவும் விலை குறையாமல் தடுக்க குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இப்படி எல்லா விளை பொருளும் ஊசலாடிக்கொண்டே இருந்தால், ஓரு நாள் இந்தியா முழுவதும் விவசாயமும் ஊசலாடி விடும்.
இந்தியா முழுவதும் தற்போது, பருத்தி, அரிசி, கோதுமை இதர உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தோட்டக்கலை காய்கறிகள் அத்தனைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இப்படி செய்தால் விவசாயத்தை ஓரளவு காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் விவசாயிகள் வீழ்ந்து விடுவார்கள். விவசாயிகள் வீழ்ந்து விட்டால் மிகப்பெரும் பணக்காரர்கள், நாட்டின் முதல்தர மக்கள் தவிர மற்றவர்கள் உணவுக்கு சிரமப்பட வேண்டிய நிலை உருவாகும். ஏன் மண்ணை வைத்து அழகிய ரெசிபிக்கல் தயாரிப்பது குறித்த வீடியோக்கள் கூட வெளியாகலாம். எதிர்கால அபாயத்தை நாங்கள் சொல்லி விட்டோம். விவசாயத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். இவ்வாறு கூறினர்.