விலையில் வீழ்ச்சி: தேனி மாவட்டத்தில் வீதிக்கு வந்தது தக்காளி

தக்காளி விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளதால், தெருக்களில் கூவி, கூவி விற்கும் நிலை உருவாகி உள்ளது.

Update: 2021-12-23 02:15 GMT

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கிலோ 140 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி,  தற்போது 40 ரூபாய்க்கும் கீழே வந்துள்ளதால் தெருவில் கூவிக் கூவி விற்கின்றனர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்ததால் தக்காளி சாகுபடி பெரும் அழிவினை சந்தித்தது. தக்காளி வரத்து குறைந்து தேவை அதிகரித்ததால், கிலோ 140 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. அவ்வளவு விலை கொடுத்தாலும் தக்காளி கிடைக்காத நிலையும் காணப்பட்டது.

கடந்த 10 நாட்களாகவே தமிழகத்தில் எங்கும் மழையில்லை. இதனால் தக்காளி வரத்து மெல்ல, மெல்ல அதிகரித்தது. தற்போது வரத்து ஓரளவு சமநிலையை எட்டியுள்ளது. இதனால் விலையும் படிப்படியாக சரிந்து கிலோ 40 ரூபாய்க்கும் கீழே வந்தது. விலை அதிகமாக இருக்கும் போது,  கடும் பற்றாக்குறை இருந்தது. தற்போது வரத்து தாராளமாக உள்ளதால், சிறு வியாபாரிகள் அதிகமாக வாங்கி தெருவில் தள்ளுவண்டிகளில் கூவிக், கூவி விற்கத்தொடங்கி உள்ளனர். இதேபோல் விலை அதிகரித்து காணப்பட்ட பிற காய்கறிகளின் விலைகளும் மெல்ல குறைய தொடங்கி உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News